Last Updated : 08 Jan, 2021 06:53 AM

 

Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

விளையாட்டாய் சில கதைகள்: சத்யனின் ஒலிம்பிக் கனவு

இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரனின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 8).

சென்னையில் உள்ள மத்தியதர குடும்பம் ஒன்றில் பிறந்த சத்யனுக்கு, டேபிள் டென்னிஸ் விளையாட்டு பிடித்துப் போக முக்கிய காரணம் அதன் வேகம். மேஜையின் இருபுறமும் வீரர்கள் துள்ளிக் குதித்தபடி ‘பட் – படார்’ என்று மின்னல் வேகத்தில் பந்தை திருப்பியடிப்பதை பார்த்த சத்யன், சிறு வயதிலேயே தானும் ஒரு டேபிள் டென்னிஸ் வீரனாகத்தான் உருவாக வேண்டும் என்று முடிவெடுத்தார்.

ஆனால் டேபிள் டென்னிஸ், இந்தியாவில் புகழ்பெற்ற விளையாட்டாக இல்லாததால், இதில் தங்கள் மகனால் புகழ்பெற முடியுமா என்று அவரது பெற்றோர் யோசித்துள்ளனர். ஆனால் டேபிள் டென்னிஸில்தான் தனது எதிர்காலம் என்பதில் சத்யன் பிடிவாதமாக இருக்க, வேறு வழியின்றி அவரது பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் டேபிள் டென்னிஸில் பெரிதாக சாதிக்க முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்ததால் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இப்படி ஒருபுறம் தனக்காக டேபிள் டென்னிஸ், மறுபுறம் பெற்றோருக்காக படிப்பு என்று சத்யனின் சிறுவயது தொடர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக சென்றுகொண்டிருந்த சத்யனின் பயணம், 2016-ம் ஆண்டில் பெல்ஜியம் ஓபன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து வேகமெடுத்தது. இதைத்தொடர்ந்து பல டேபிள் டென்னிஸ் தொடர்களில் பதக்கம் வென்ற சத்யன், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு முதல் 30 வீரர்களுக்குள் இடம்பிடித்த சத்யன், இச்சாதனையை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இப்போது ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் ஆசையுடன் பயிற்சிபெற்று வருகிறார். அவரது ஆசை நிறைவேறட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x