Last Updated : 20 Dec, 2020 11:12 AM

 

Published : 20 Dec 2020 11:12 AM
Last Updated : 20 Dec 2020 11:12 AM

‘36 சம்மர்’ புதுசு இல்லீங்க: 20 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரிய சொதப்பல்கள்

இந்திய அணி : கோப்புப்படம்

அடிலெய்ட்

அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்திய அணி இதுபோல் சுருண்டது முதல் முறை மட்டுமல்ல, கடந்த 20 ஆண்டுகளில் இதுபோல் “சடன் கொலாப்ஸ்” பல முறை இந்திய அணிக்கு நடந்துள்ளது.

அதிலும் சச்சின், சேவாக், டிராவிட், கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்தபோதே இதுபோன்று பேட்டிங்கில் சொதப்பி 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகிய கதைகள் நடந்துள்ளன. இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியிலேேய 100 ரன்களில் சுருண்டு ரசிகர்களின் வெறுப்பையும், கோபத்தையும் வாங்கிக்கட்டிக் கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

அதுகுறித்த சுவாரஸ்யமான தொகுப்பு இது.

100 ரன்களில் மும்பையில் ஆல் அவுட்

கடந்த 2006-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 1-1 என்று சமன் செய்து திரும்பியது. இதில் மும்பையில் மார்ச் 18 முதல் 22-ம் தேதி வரை நடந்த டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 100 ரன்களில் ஆட்டமிழந்து 212 ரன்களில் தோற்றது. இந்தப் போட்டிக்கு திராவிட் கேப்டனாகச் செயல்பட்டார்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 400 ரன்களும், இந்திய அணி 279 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 191 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு 313 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்திய அணியோ 100 ரன்களில் ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியைப் பெற்றது.

இங்கலாந்து பந்துவீச்சாளர் ஷான் உதால்

இந்தப் போட்டியில் சச்சின் (34) கும்ப்ளே (8), யுவராஜ்சிங் (12) சேவாக் (0), தோனி (5) திராவிட் (9) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் சச்சின் ஆட்டமிழக்கும்போது 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. ஆனால், அடுத்த 25 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் இந்திய அணிக்கு எதிராக ஷான் உதால் எனும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணமானார். அதன்பின் இங்கிலாந்து அணியில் அவர் விளையாடவில்லை.

கடந்த 1985-ம் ஆண்டுக்குப் பின் இந்திய மண்ணில் இந்தியாவை இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில்தான் வென்றது. ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஹேமில்டனில் 99 ரன்கள்

கடந்த 2002-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அப்போது ஹேமில்டன் நகரில் நியூஸி. அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 99 ரன்களில் இந்திய அணி சுருண்டது. இந்தப் போட்டி டிசம்பர் 19-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி முடிந்தது.

ஷேன் பாண்ட்

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 99 ரன்களில் ஆட்டமிழந்தது. ஷேன் பாண்ட், டேரன் டஃபி இருவரும் இந்திய பேட்ஸ்மேன்களை மிரளவைத்து இருவரும் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
சச்சின் (9), திராவிட் (9), கங்குலி (5), சேவாக் (1), லட்சுமண் (23) என ஜாம்பவான்கள் வரிசையாக ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். பதிலடியாக பந்துவீச்சில் இந்திய அணியின் ஜாகீர்கான், நெஹ்ரா, ஹர்பஜன் ஆகியோரால் 94 ரன்களில் நியூஸிலாந்து அணி சுருண்டது.

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இங்கிலாந்து பறிபோன மரியாதை

2014-ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து பயணத்தை மறக்க முடியாது. அதிலும் ஓவலில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 148 ரன்களில் ஆட்டமிழந்தது.

வோக்ஸ், ஜோர்டான், ஆன்டர்ஸன், பிராட் ஆகியோரின் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் கோலி, புஜாரா, கம்பீர், ரஹானே என சொற்ப ரன்களில் வெளியேற தோனி மட்டும் 82 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 486 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் ஜோர்டான், ஆன்டர்ஸன் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 30 ஓவர்களுக்குள் 94 ரன்களில் சுருண்டு 224 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வி இதுவாகும்.

டிவில்லியர்ஸ் காட்டடி: அகமதாபாத் அசிங்கம்

கடந்த 2008-ம் ஆண்டில் இந்தியாவுக்குத் தென் ஆப்பிரிக்க அணி பயணம் மேற்கொண்டது. ஏப்ரல் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அகமபதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வி அடைந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 20 ஓவர்களில் 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டேல் ஸ்டெயின், என்டினி, மோர்கல் மூவரும் சேர்ந்து இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டினர். போட்டி தொடங்கி மதிய உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது.

கும்ப்ளே தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் சேவாக் (6), திராவிட் (3) லட்சுமண் (3), கங்குலி (0), தோனி (14) என ஏமாற்றினர். தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் ஜேக்ஸ் காலிஸ் (132) சதம், டிவில்லியர்ஸ் இரட்டைச் சதம் (227 நாட் அவுட்) ஆகியவற்றால் 7 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து இந்திய அணியைக் கண்ணீர் விடவைத்தது.

அதிலும் டிவில்லியர்ஸ், காலிஸ் இருவரும் சேர்ந்து இந்தியப் பந்தவீச்சாளர்களைக் கண்ணீர் வரவழைக்கும் வைக்கும் அளவுக்கு அடித்துத் துவைத்தனர். இருவரையும் ஆட்டமிழக்க வைக்க முடியால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் படாதபாடு பட்டனர். இதில் காலிஸ் மட்டும் ஆட்டமிழந்தார், டிவில்லியர்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை.

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 328 ரன்களில் ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்களில் தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x