Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

ஆஸி.யுடன் பகலிரவு டெஸ்டில் இன்று மோதல்: 7 பேட்ஸ்மேன், 4 பந்து வீச்சாளருடன் களமிறங்கும் இந்திய அணி

அடிலெய்டு ஓவல் ஆடுகளத்தை பார்வையிடும் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன்.

அடிலெய்டு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டி, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி 7 பேட்ஸ்மேன்கள், 4 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது.

இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் அடிலெய்டில் இன்று பகலிரவாக தொடங்குகிறது. இது பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி நேற்றே அறிவிக்கப்பட்டது.

தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், பிரித்வி ஷா இடம் பெற்றுள்ளனர். சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விகாரி ஆகியோரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரித்திமான் சாஹாவும் இடம் பெற்றனர். வேகப்பந்து வீச்சாளர்களாக மொகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வினும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிங்க் பந்து பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த ரிஷப் பந்த் மற்றும் தொழில்நுட்ப அளவில் நேர்த்தியாக பேட் செய்த ஷுப்மன் கில் ஆகியோருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியிருந்தது. இதற்கு மும்முறை ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்க முயற்சி செய்யக் கூடும்.

பயிற்சி ஆட்டத்தின் போது மூளையதிர்ச்சி அடைந்த ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் உடல் தகுதி பெற்றதை தொடர்ந்து பிங்க் பந்து டெஸ்டில் களமிறங்குவதை கேப்டன் டிம் பெயின் நேற்று உறுதிப்படுத்தினார்.

பிங்க் பந்து டெஸ்டில் மட்டும் 42 விக்கெட்களை வேட்டையாடி உள்ள மிட்செல் ஸ்டார்க்கை சமாளிப்பது இந்திய அணிக்கு சவாலாக இருக்க கூடும். பிங்க் பந்து டெஸ்ட் போட்டியை பொறுத்த வரையில் முதல் செஷன் ரன்கள் குவிக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக இருக்கும். அதேவேளையில் அந்திப் பொழுதில் பிங்க் பந்தின் வேகம் அதிகரித்து பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த உதவியாக இருக்கும்.

இதனால் இந்த காலக் கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடுவது அவசியம். ஆஸ்திரேலிய அணி இதுவரை 8 பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் கூட அந்த அணி தோல்வியை சந்தித்தது இல்லை. அதேவேளையில் இந்திய அணி ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் (வங்கதேசத்துக்கு எதிராக) விளையாடி வெற்றி கண்டிருந்தது.

இன்றைய ஆட்டம்

நேரம்: காலை 9.30

நேரலை: சோனி சிக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x