Last Updated : 15 Oct, 2015 07:39 PM

 

Published : 15 Oct 2015 07:39 PM
Last Updated : 15 Oct 2015 07:39 PM

பொறியியல் பட்டப்படிப்பை விடுத்து பவுலிங்கை தேர்ந்தெடுத்தேன்: ஜாகீர் கான்

ஜாகீர் கான் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2003, 2011 உலகக்கோப்பைகளில் பிரமாதமாக வீசி முதன் முறை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதையும், 2-ம் முறை இந்தியா உலகக்கோப்பையை வென்றதும் ஜாகீர் கானின் நினைவுகளை நம்மிடையே ஆழமாக்குவதாகும்.

நியாயமாகப் பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் எப்படி பிரியாவிடை நிகழ்ச்சியுடன் மனதிருப்தியுடன் ஓய்வு பெற்றாரோ அத்தகைய பிரியாவிடைக்கு உரியவரே ஜாகீர் கான். வேகப்பந்து வீச்சு என்பது ஏன் பந்து வீச்சு என்பதே கிரிக்கெட்டில் எப்போதும் இரண்டாம் பட்சம்தான், என்ற சிந்தனைப் போக்கில் கபில்தேவுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது இந்திய வேகப்பந்து வீச்சாளராக ஜாகீர் கான் திகழ்ந்தார்.

கென்யாவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்ட ஜாகீர் கான், ஸ்டீவ் வாஹ் ஸ்டம்பை பெயர்த்ததை மறக்க முடியாது. இன்னும் எத்தனையோ விக்கெட்டுகள். இங்கிலந்து தொடரில் இவரும், ஆர்.பி.சிங்கும் ஸ்விங் பவுலிங் விருந்து அளித்ததை மறக்க முடியுமா?

இந்நிலையில் எப்போதும் தன் முயற்சியில் அயராது செயலாற்றிய ஜாகீர் கான் ஓய்வு அறிவித்து அது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருவர் எடுக்கக் கூடிய மிகக் கடினமான முடிவு ஆட்டத்தை விட்டுப் போகும் முடிவுதான். எப்போதும் இன்னும் கொஞ்சம் தூரம் செல்ல வேண்டும், இன்னும் இன்னும் என்றுதான் மனம் அலைபாயும். ஆனால் உடல் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மனதின் இச்சையை மறுப்பதாக உள்ளது.

வரவிருக்கும் கிரிக்கெட் சீசனுக்காக நான் என்னை பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்ட போதுதான் நாளொன்றுக்கு 18 ஓவர்களை வீசக்கூடிய நிலையில் எனது தோள்பட்டை இல்லை என்ற விழிப்புணர்வு திடீரென ஏற்பட்டது. எனவே இந்த நேரமே அந்த நேரம்...

உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் முடிவை எடுத்தேன். ஐபிஎல் 9-ம் அத்தியாயத்துக்குப் பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறுவேன்.

ஷ்ரீராம்பூர் என்ற சிறிய ஊரிலிருந்து சிறுவனாக நான் வளர்ந்து வந்த போது ஒரு கட்டத்தில் பொறியியல் பட்டப்படிப்பா அல்லது கிரிக்கெட் பவுலிங்கா என்பதை முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்தது. அப்போது என் தந்தை கூறியது எனது நினைவின் மூலையில் இன்னமும் லேசாக இருக்கிறது, “நிறைய பொறியியளார்கள் உள்ளனர், நீ பவுலராகு” என்றார், அப்போது முதல் எனது முடிவுகள் அனைத்தையும் எனது பெற்றோர் ஆதரித்தே வந்தனர்.

எனது ஆரம்ப கால கிரிக்கெட் எனக்கு இனிமையாக நினைவிருக்கிறது. 1996-ம் ஆண்டு நேஷனல் கிரிக்கெட் கிளப் முதல் மும்பை அண்டர்-19 அணிக்கு அழைக்கப்பட்டது நினைவிருக்கிறது. அதன் பிறகு எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியில் சில மாதங்கள் பயிற்சி பெற்றது, பரோடா அணிக்கு எதிரான எனது அறிமுக போட்டி, அதிலிருந்து மும்பை அணியை தலைமையேற்று நடத்தியது என்று ஒவ்வொரு ஆட்டத்தையும் நான் உற்சாகத்துடன் அணுகினேன். ஒவ்வொரு ஆட்டமும் என்னை வெளிப்படுத்திக் கொள்ள சிறந்த வாய்ப்பாகவே இருந்தது. கிரிக்கெட் களத்தில் ஒரு வீரனாக எப்போதும் மேம்பாடடையவே முயன்றேன்.

இந்திய அணிக்காக 2000-ம் ஆண்டு ஆடியதற்கு முன்னதான போட்டிகள் என்று எனக்கு முக்கியமான வாய்ப்புகள் தேடி வந்தது. கடினமான, வேறுபட்ட காலக்கட்டங்களில் என்னை நிறைய பேர் ஆதரவளித்து ஊட்டி வளர்த்தனர். பிறகு இந்திய அணிக்காக பங்களிப்பு செய்தேன், அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

எனது பயிற்சியாளர்கள், கேப்டன்களிடமிருந்து எனக்கு நிபந்தனையற்ற ஆதரவு இருந்ததால், ரிஸ்க் இருக்கும் பல கள வியூக அமைப்புகள், வித்தியாசமான அணுகுமுறை எனக்கு கைகூடியது.

எனது மிக முக்கியமான தருணம் 2011 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது. நாங்கள் ஒரு சிறந்த அணியாக விளையாடினோம், இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் இடத்தைப் பிடித்த காலக்கட்டத்தில் விளையாடியது நிறைவைத் தருகிறது. இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்த கணங்கள் எனக்கு திருப்திகரமான காலங்களாகும். வெற்றி பெறுவது என்பது ஒரு போதை. எனவே இந்திய அணிக்காக வெள்ளைச் சீருடையில் பங்கேற்று இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக எழுச்சிபெற்றது எனக்கு மகிழ்ச்சிதரும் கணமாகும்.

எனக்கு முழு ஆதரவளித்த பிசிசிஐ மற்றும் முன்னாள், என் காலத்திய வீரர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஓய்வறையை பகிர்ந்து கொண்ட வீரர்களில் சிலர் எனது நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். அவர்களுடன் விளையாடுவது ஒரு மகிழ்ச்சியான விஷயம், ஏனெனில் ஒவ்வொருவரும் வித்தியாசமான பார்வையை கூடுதலாக என்னிடம் ஏற்படுத்தினர்.

என் வாழ்க்கையின் மையமான என் குடும்பம் என்னை பொறுமையுடன் தள்ளியிருந்து அவர்கள் பார்த்துக் கொண்டனர். எனது கனவைத் துரத்த என்னைப் புரிந்து கொண்ட எனது பெற்றோருக்கு எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் அது போதாது. என்னுடைய அண்ணன் ஜீஷன், அவர்தான், இந்தியாவுக்கு ஆட வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயமல்ல, ஒவ்வொரு ஆட்டத்திலும் கவனம் செலுத்து’ என்றார்.

என் இளைய சகோதரன் அனீஸ், நிறைய அழுத்தங்களை எனக்காகச் சுமந்தவர். இந்திய அணியின் நலம் விரும்பிகள், லட்சக்கணக்கான ரசிகர்கள் என்னை ஊக்குவித்த வண்ணம் இருந்தனர். நான் எப்போதுமே முயற்சியைக் கைவிடுபவன் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

என்னை பாராட்டிய மற்றும் ஆக்கபூர்வ விமர்சனங்களை முன்வைத்த ஊடகங்களுக்கு நன்றியைப் பதிவு செய்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் மட்டுமே எனது வாழ்க்கை. உண்மையில் கூறவேண்டுமெனில் அது ஒன்றுதான் எனக்குத் தெரிந்தது. கிரிக்கெட்தான் நான் இப்போது உருவாகியிருக்கும் தனிமனிதனாக என்னை ஆக்கியது. எனக்கு வாழ்க்கையில் சகலத்தையும் அளித்தது, அளிக்கப்போவதும் கிரிக்கெட்தான். மிகச்சிறந்த நினைவுகளுடன் நான் விடைபெறுகிறேன். அதாவது வாழ்க்கையை விளக்கும் அனுபவங்கள் மற்றும் மகா நட்புகள். நான் ஓய்வு பெறும் முடிவை எடுத்தவுடன் என் தாயார் அருமையாக தொகுத்து கொடுத்த வார்த்தைகள்: இட்ஸ் ஓகே. வெரி குட் ஜர்னி ஃபார் அஸ்.

’மீண்டும் ஜாகீர் கான்’ என்ற தலைப்பு மீண்டுமொரு முறை ஒருவேளை எனக்காக எழும், ஏனெனில் இந்த ஆட்டத்துக்கு நான் நிறைய திருப்பி அளிக்கக் கடமைப்பட்டவானக உள்ளேன். இந்த அருமையான நாடு, ஷிரீராம்பூரிலிருந்து ஒரு குழந்தை தனது கனவைத் துரத்த வாய்ப்பளித்தது.

இவ்வாறு ஜாகீர் கான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x