Published : 22 Oct 2015 04:37 PM
Last Updated : 22 Oct 2015 04:37 PM

சதமடித்தார் விராட் கோலி: வலுவான நிலையில் இந்தியா

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்தார். 112 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் விராட் கோலி சதம் கண்டார்.

இது இவரது 23-வது ஒருநாள் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

95 ரன்களில் இருந்த விராட் கோலி, இடது கை சுழற்பந்து வீச்சாளர் பாங்கிஸோ ஆட்டத்தின் 38-வது ஓவரை வீச 2-வது பந்தை லாங் ஆனில் அபாரமான சிக்ஸ் அடித்து சதத்தைக் கடந்தார். உடனே ஓய்வறையை நோக்கி தனது வழக்கமான பாணியில் தனது மகிழ்ச்சியை செய்கையில் வெளிப்படுத்தினார்.

இந்திய அணி 38 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 102 ரன்களுடனும், ரெய்னா 30 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர்.

தொடக்கத்தில் ரோஹித் சர்மா ஆவேசமாகத் தொடங்கி 19 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த நிலையில் கிறிஸ் மோரிஸின் பந்தை பிளிக் செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷிகர் தவண் மட்டையும் கையுமாக இனி வலைப்பயிற்சிக்குச் செல்ல வேண்டியதுதான் என்பது போன்று ஆடி 15 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ரபாதாவின் பந்தில் டி காக்கின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார். ஒரு சுலபமான ஷார்ட் பிட்ச் பந்தை தவறாக அடிக்க டி காக் ஒரு கையில் அற்புதமாகக் கேட்ச் பிடித்தார்.

பிறகு ரஹானே, கோலி ஜோடி சுமார் 18 ஓவர்களில் 104 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது.

2 பவுண்டரி 2 சிக்சருடன் விராட் கோலி 51 பந்துகளில் அரைசதம் கண்டார். ரஹானே 53 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து, டிவில்லியர்ஸ் அருமையான ஒரு காய் நகர்த்தலாக டேல் ஸ்டெய்னைக் கொண்டு வர, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் விராட் கோலி, ரஹானே ஜோடி சேர்ந்து எடுத்த ரன்களினால்தான் இந்திய அணி நிலைப்பெற்றது என்றால் மிகையாகாது.

இந்நிலையிலிருந்து 300 ரன்கள் எடுக்க கோலி கடைசி வரை நிற்பது அவசியமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x