Published : 09 Oct 2015 08:58 AM
Last Updated : 09 Oct 2015 08:58 AM

ஐஎஸ்எல்: சென்னை அணிக்கு 2-வது தோல்வி

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது. டெல்லி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கும் அதேவேளையில் சென்னை அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த பின்கள வீரர் மெய்ல்சனுக்குப் பதிலாக பெர்னாட் மென்டியும், ரஃபேல் அகஸ்டோவுக்குப் பதிலாக மானுவேல் பிளாசியும் சேர்க்கப்பட்டனர். முன்கள வீரர்களில் கடந்த போட்டியில் விளையாடிய ஜேஜே லால்பெக்குலா இந்திய அணிக்காக உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் விளையாட சென்றுவிட்டதால் அவருக்குப் பதிலாக மென்டோஸா சேர்க்கப்பட்டார். மற்றொரு முன்கள வீரர் பிக்ருவுக்குப் பதிலாக பல்வந்த் சிங் இடம்பெற்றார்.

8-வது நிமிடத்தில் கோல்

டெல்லி அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பின்களத்தில் அன்வர் அலிக்குப் பதிலாக அனாஸ் இடாதோடிகாவும், மிட்பீல்டில் டிசவுசாவுக்குப் பதிலாக குஸ்டாவ் டாஸ் சேன்டோவும் சேர்க்கப்பட்டனர். ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக ஆட, 8-வது நிமிடத்தில் டெல்லி கேப்டன் ஹான்ஸ் முல்டர் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்தை பெனால்டி பாக்ஸுக்குள் நின்ற சென்னை பின்கள வீரர் பிளாசி முழங்கையால் இடிக்க, டெல்லி அணிக்கு ஸ்பாட் கிக் வாய்ப்பை வழங்கினார் நடுவர். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிகாவ் அதில் கோலடிக்க, டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு டெல்லி அணி மிகுந்த நம்பிக்கையோடு ஆட, சென்னை அணி ஸ்கோரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் ஆடியது. சென்னை அணிக்கு 25-வது நிமிடத்தில் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தபோதும், அதை டெல்லி வீரர்கள் அற்புதமாக முறியடித்தனர்.

30-வது நிமிடத்தில் டெல்லி ஸ்டிரைக்கர் ரிச்சர்ட் காட்ஸே, சென்னையின் 3 பின்கள வீரர்களை வீழ்த்திவிட்டு கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடித்தார். ஆனால் சென்னை கோல் கீப்பர் இடெல் அதை அற்புதமாக முறியடித்தார். இதையடுத்து டெல்லி அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் புளோரென்ட் பந்தை உதைக்க, கோல் கம்பத்தின் முன்னாள் நின்ற சான்டோஸ் மிக அற்புதமாக பந்தை தலையால் முட்டி கோல் கம்பத்தை நோக்கி திருப்பினார். ஆனால் அதையும் அற்புதமாக தகர்த்தார் இடெல்.

34-வது நிமிடத்தில் மென்டோஸா கோல் கம்பத்தை நோக்கி உதைத்த பந்து, கோல் கம்பத்தின் இடது புறத்தில் பட்டு வெளியேறியதால், நூலிழையில் கோல் வாய்ப்பு நழுவியது. இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் சென்னை அணி கோலடிக்க தீவிரமாக போராடினாலும், டெல்லியின் பின்கள வீரர்களை தாண்டி செல்ல முடியவில்லை. 61-வது நிமிடத்தில் சென்னை வீரர் ஹர்மான்ஜோத் கப்ரா கொடுத்த கிராஸை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அபிஷேக் தாஸ் அதில் கோலடிக்க முயன்றார். ஆனால் அதை டெல்லி கோல் கீப்பர் சஞ்ஜிபன் அற்புதமாக முறியடித்தார்.

68-வது நிமிடத்தில் கொல்கத்தாவின் கோல் வாய்ப்பு நூலிழையில் நழுவ, 69-வது நிமிடத்தில் இலானோவுக்குப் பதிலாக புருனோ பெலிசாரியை மாற்று வீரராக களமிறக்கியது சென்னை. அதற்கும் பலன் கிடைக்காததைத் தொடர்ந்து பிளாசிக்குப் பதிலாக பிக்ருவை இறக்கிவிட்டார் சென்னை பயிற்சியாளர் மெட்டாரஸி. ஆனாலும் கடைசி வரை கோல் எதுவும் விழாததால் டெல்லி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

புனே-நார்த் ஈஸ்ட்

இடம்: புனே

நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜெயா மேக்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x