Published : 18 Sep 2015 07:58 PM
Last Updated : 18 Sep 2015 07:58 PM

ரெய்னா மீண்டும் ஏமாற்றம்; நசீர் ஹுசைனின் சதம், 5 விக்: இந்தியா ஏ தோல்வி

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணியின் குர்கீரத் சிங் ஆல் ரவுண்ட் திறமை வெளிப்படுத்தி வெற்றி பெறச் செய்தார், இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் வங்கதேச ஏ அணியின் நசீர் ஹுசைன் பேட்டிங்கில் 102 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்ததோடு, பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியா ஏ அணியை வீழ்த்த முக்கிய காரணியானார்.

வங்கதேச ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 119/1 என்ற நிலையிலிருந்து 42.2 ஓவர்களில் 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.

பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ கேப்டன் உன்முக்த் சந்த் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், அவரது தேர்வு சரியே என்று நினைக்கும் படியாக ரிஷி தவண், கரண் சர்மா கலக்க அந்த அணி 19-வது ஓவரில் 82/5 என்று ஆனது. அதன் பிறகு நசீர் ஹுசைன் லிட்டன் தாஸ் (45) இணைந்து 15 ஓவர்களில் 6-வது விக்கெட்டுக்காக 70 ரன்கள் சேர்த்தனர். அரபாத் சன்னியுடன் சேர்ந்து அடுத்த விக்கெட்டுக்காக மேலும் 50 ரன்கள் சேர்க்கப்பட்டது.

கடைசி 5 ஓவர்களில் 40 ரன்கள் விளாசப்பட்டது. 212/8 என்ற நிலையிலிருந்து தனது அபார சதத்துடன் நசீர் ஹுசைன் ஸ்கோரை 252 ரன்களாக உயர்த்தினார்.

முன்னதாக சவுமியா சர்க்கார் திணறலான 24 ரன்களை எடுத்தார், இருமுறை இவருக்கு கேட்ச் விடப்பட்டது. ரிஷி தவண் பந்தை வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார். அடுத்த ஓவரில் மோமினுல் ஹக் விக்கெட்டை தவண் வீழ்த்தினார். அனாமுல் ஹக் 34 ரன்களில் கரண் சர்மா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிறகு சபீர் ரஹ்மானையும் பவுல்டு செய்ய 82/5 என்று ஆனது.

37-வது ஓவரில் நசீர் ஹுசைன் ஸ்வீப் ஷாட் மூலம் அரைசதம் கண்டார். பிறகு கரண் சர்மாவை லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார். ரெய்னாவை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசினார். இதில் ஒரு மாட்டடி ஸ்லாக் ஸ்வீப்பும், இரண்டு கவர் டிரைவ்களும் அடங்கும். இன்னும் 3 ஓவர்கள் இன்னிங்ஸ் முடிய இருக்கும் வேளையில் 94 பந்துகளில் நசீர் ஹுசைன் சதம் கண்டார். அவர் 96 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 102 நாட் அவுட்டாக இருந்தார். இந்திய அணியில் ரிஷி தவண் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கரன் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். குர்கீரத் சிங் இம்முறை சோபிக்கவில்லை, ரெய்னா 3 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்தியா ஏ இலக்கைத் துரத்திய போது 28 ஓவர்களில் 119/1 என்று வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. உன்முக்த் சந்த் 56 ரன்களுடன் இருந்தார், ரூபல் ஹுசைனை ரெய்னா ஒரு சிக்சர் அடித்தார், 19 ஓவர்களில் வெற்றிக்கு 116 ரன்கள் தேவை என்ற எளிதான இலக்கே இருந்தது. ஆனால் நசீர் ஹுசனினின் விக்கெட் விழ முடியாத லெக் திசை பந்தை உன்முக்த் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 56 ரன்களில் வெளியேறினார். ரெய்னா (17), கருண் நாயர் (4) ஆகியோரை நசீர் ஹுசைன் 34-வது ஓவரில் வீழ்த்தினார், இருவரும் ஸ்டம்ப்டு அவுட். இந்தியா ஏ 146/5 என்று ஆனது.

வங்கதேச கேப்டன் மொமினுல் ஹக் அருமையாக அப்போது கேப்டன்சி செய்தார், அதாவது வேகப்பந்து வீச்சாளர் ரூபல் ஹுசைனை இன்னொரு முனையில் கொண்டு வர சஞ்சு சாம்சன் கோல்டன் டக்கில் ஆட்டமிழக்க, கரன் சர்மா 2 ரன்களில் ரூபலிடம் வீழ்ந்தார். பிறகு ரிஷி தவணை பவுல்டு செய்தார் நசீர் ஹுசைன். இவரும் டக் அவுட். இந்தியா ஏ வாய்ப்பு பறிபோனது.

குர்கீரத் சிங் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து கடைசியாக அல்-அமின் ஹுசைனிடம் அவுட் ஆக இந்தியா ஏ இன்னும் 46 பந்துகள் மீதமுள்ள நிலையில் 187 ரன்களுக்குச் சுருண்டது. ரூபல் ஹுசைன் 4 விக்கெட்டுகளையும் நசீர் ஹுசைன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக மயங்க் அகர்வால் 24 ரன்கள் எடுத்து ரூபல் ஹுசைன் பந்தை டிரைவ் ஆட முயன்று வெளியேறினார், உன்முக்த் சந்த் ஷபியுல் இஸ்லாம் ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார், மணிஷ் பாண்டே மிகவும் திணறினார். பாண்டே 70 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களை மட்டும் எடுத்து ரூபல் ஹுசைன் பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்க முயல ஸ்டம்ப் பெயர்ந்தது.

வங்கதேசம் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் 1-1 என்று சமன் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x