Published : 24 Feb 2020 16:03 pm

Updated : 24 Feb 2020 16:03 pm

 

Published : 24 Feb 2020 04:03 PM
Last Updated : 24 Feb 2020 04:03 PM

பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளை பவுண்டரி அடிக்க வேண்டும்: புஜாராவுக்கு கோலி சூசகம் 

boundary-balls-should-be-put-away-kohli-to-defensive-mindset-pujara

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து விமர்சனங்களை கோலி எதிர்கொண்டு வருகிறார். நியூஸிலாந்து நெருக்கமான களவியூகம் அமைத்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் வீசுகின்றனர், இதை முறியடிக்க அடித்து ஆடியே ஆக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

குறிப்பாக புஜாரா முதல் இன்னிங்சில் 42 பந்துகளில் 11 ரன்களையும் 2வது இன்னிங்சில் 81 பந்துகளில் 11 ரன்களையும் எடுத்தார், மொத்தம் 123 பந்துகளில் 22 ரன்களைத்தான் அவர் எடுத்தார். 20 ரன்களுக்கும் குறைவாகவே ஸ்ட்ரைக் ரேட் உள்ளது. டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் இது சரியான பேட்டிங் உத்தியல்ல. மேலும் அவர் ஆஃப் வாலி, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, லெக் ஸ்டம்ப் லைனில் வீசிய ஷார்ட் பிட்ச் பந்துகளையும் ரன் எடுக்கத் தவறினார். மாறாக வேகப்பந்து சாதக ஆட்டக்களங்களில் ஷார்ட் பிட்ச் பந்துகள் ஸ்கோரிங் வாய்ப்புகளாகப் பார்க்கப்பட வேண்டும்.


இதை விட முக்கியமானது மயங்க் அகர்வாலுக்கு அது கடும் சிரமங்களைக் கொடுத்தது, குறிப்பாக ஷா ஆட்டமிழந்த பிறகு புஜாரா 5 ஓவர்களை மெய்டனாக்கினார்.

இதனால் சற்றே பதற்றமடைந்த அகர்வால், படேல் வீசிய இன்னிங்சின் 27வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என்று ரிஸ்க் எடுக்க வேண்டியதாயிற்று. மொத்தம் 7 ஓவர்களை புஜார மெய்டன்களாக்கி தேநீர் இடைவேளைக்கு முன்பாக போல்ட் வீசிய கடைசி பந்தை உள்ளே வருமா வெளியே செல்லுமா என்று கணிக்கத் தவறி ஆடாமல் விட பவுல்டு ஆகி 11 ரன்களில் வெளியேறினார். கோலி இறங்கி கொஞ்சம் பாசிட்டிவாக ஆடினார், ஆனால் அவரையும் கைல் ஜேமிசன் கட்டிப்போட்டார், இதனையடுத்து லெக் திசையில் சென்ற ஒரு சாதாரண பந்தை அகர்வால் காற்றில் பிளிக் ஆடி கேட்ச் ஆகி வெளியேறினார்.

முன்பெல்லாம் ஒரு கட்டத்தில் ராகுல் திராவிட்டின் ஆரம்பக் காலக்கட்டத்தில் 3ம் நிலையில் இறங்கும் திராவிட் இவ்வாறு ஆடி எதிர்முனையில் இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியதை அப்போதைய தொலைக்காட்சி வர்ணனையாளர்களும் ஆஸ்திரேலியாவின் ரிச்சி பெனோ, இயன் சாப்பல் போன்றோரும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலியும் இதனை உணர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, “பாசிட்டிவ் ஆன மனநிலைக்குள் வர முயற்சி செய்ய வேண்டும். பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தெளிவான மன நிலை வேண்டும். உள்நாட்டிலும் கூட நிறைய ஷாட்களை ஆட முடியாது என்பது சரிதான். பந்துகள் திரும்பும் பிட்சில் கூட பந்தைத் தேர்ந்தெடுத்துத்தான் அடிக்க வேண்டும். ஆனால் பவுண்டரி அடிக்க வேண்டிய பந்தை பவுண்டரி அடிக்கும் தீவிர மனநிலை வேண்டும்.

ரஹானே பாசிட்டிவ் மனநிலையில் இறங்கினார், நானும் அவரும் பாசிட்டிவாக ஒரு 70-80 ரன்கள் கூட்டணி அமைத்திருந்தால் மாறியிருக்கும். நாம் தான் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும், சில வேளைகளில் அது வேலைக்கு ஆகாமல் போய்விடும் ஆனால் நீண்ட நேரம் பாசிட்டிவ் ஆக ஆட முயன்றால் நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும். நிலைமைகள் மாறும். இது குறித்து ஏற்கெனவே பேசிவிட்டோம், அடுத்த டெஸ்ட் போட்டிக்குச் செல்லும் முன் இதனை நாங்கள் எங்கள் மனதுக்குள் கொண்டு வந்து விட வேண்டும்.

பிட்ச் அவர்களின் திட்டங்களுக்கு ஒத்து வந்தது. பீல்டர்களை நெருக்கமாக வைத்து ஒரே இடத்தில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வீசிக் கொண்டே இருந்தனர். அடித்து ஆடினாலே தவிர அவர்களின் திட்டங்களை மாற்ற முடியாது. உள்ளபடியே கூற வேண்டுமெனில் முன் காலில் வந்து ஆடினாலும் பின் காலில் சென்று ஆடினாலும் அவர்கள் பந்து வீச்சு எங்களுக்கான இடம் கொடுக்கவில்லை. இப்போது அவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்துள்ளது, எனவே அடுத்தக் கட்டமாக அவர்களது திட்டத்தை இடியூறு செய்து கலைக்குமாறு ஆட வேண்டியது அவசியம் அப்போதுதான் போதிய ரன்களை எடுக்க முடியும்” என்றார் விராட் கோலி.

-பிடிஐ தகவல்களுடன்


தவறவிடாதீர்!

Virat KohliPujaraBoundary ballsCricketIndia tour of Newzealand 2020விராட் கோலிபுஜாராகிரிக்கெட்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x