Published : 03 Feb 2020 03:20 PM
Last Updated : 03 Feb 2020 03:20 PM

கோலியின் தலைமையினால் இந்திய அணி எப்போதும் வெற்றி பெறவே ஆடுகிறது: இயன் சாப்பல் புகழாரம்

கேப்டன் விராட் கோலியின் கீழ் இந்திய அணி பல வெற்றிகளை அடுத்தடுத்து பெற்று வருவதையடுத்து இந்திய அணி அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில் இயன் சாப்பல், கோலி தலைமையில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியையும் அவரது தலைமைத்துவ ஆளுமையினால் வெற்றி பெறவே ஆடுகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தோனி தலைமை இந்திய அணி இப்போது ஒரு தொலைதூர நினைவு மட்டுமே. விராட் கோலி அவரையெல்லாம் கடந்து சென்று 3 வடிவங்களிலும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் பத்தி ஒன்றில் இயன் சாப்பல் கூறியிருப்பதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது. 7 டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதிலும் கடைசி 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி. 8 டி20 போட்டிகளில் தொடர் வெற்றி. இதில் இருதயத் துடிப்பை எகிறச் செய்யும் 2 சூப்பர் ஓவர் போட்டி. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் இந்திய அணிக்கு வெற்றி பெறுவது என்பது ஒரு பழக்கமாகி வருகிறது.

3 வடிவங்களிலும் கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்குத்தான் இந்தப் பெருமை போய்ச் சேர வேண்டும். ஒரு கேப்டன் இப்படி அணியை வழிநடத்தும் போதும், சில வேளைகளில் தோல்வியின் வாயிலிருந்து தன் சொந்த முயற்சியினால் வெற்றியைப் பிடுங்கி வருவதும் நிகழும் போது ‘இவர் ஒரு அதிசய வேலைக்காரர்’ என்று அணி வீரர்கள் நம்பத்தொடங்குகின்றனர். கோலி அணி வீரர்கள் அனைவரின் மரியாதையையும் பெற்றுள்ளார்.

அவர் முதன் முதலாக கேப்டனான போது நான் நினைத்தேன், அவரது உணர்ச்சிவயப்படும் தன்மை அவரது தலைமைக்கு தீங்காக இருக்கும் என்று. ஆனால் அந்த உணர்ச்சியையே தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டார் கோலி. இது கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான அவரது தெளிவான சிந்தனையின் அங்கமாக உள்ளது. குறிப்பாக குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் புத்தம் புதிய திடீர் ஷாட்களை ஆடுவது பற்றி அவர் கூறும்போது தன்னுடைய டெஸ்ட் மேட்ச் ஸ்டைல் பேட்டிங் இதனால் கெட்டுப் போய் விடக்கூடாது என்ற தொனியில் அவர் கூறியது உண்மையில் தன்னுடைய கலையை நன்கு உணர்ந்த, அறிந்த மாஸ்டர் ஒருவர் பேசுவதைக் கேட்பதற்கு ஒப்பாகும்.

ஆட்டத்தின் பல அம்சங்களில் கோலி தானே முன்னின்று வழிநடத்தியுள்ளார். இதோடு அவரது வியக்க வைக்கும் பேட்டிங் சாதனைகள். அவரது உடற்தகுதி, உயர்மட்ட பீல்டிங் குறித்த அவரது வலியுறுத்தல், ஆகியவற்றினால் இந்திய அணி இந்த விஷயங்களிலும் மிகுந்த முன்னேற்றம் கண்ட அணியாக இருக்கிறது.

இந்திய வெற்றி வாய்ப்புகளில் பலவற்றைக் கோலி தானே வெற்றியாக மாற்றியது அணியில் உள்ள மற்ற வீரர்களையும் அது போல் தாங்களும் ஆட வேண்டுமென்ற உத்வேகத்தை அளித்துள்ளது. கோலியின் மூலம் ரோஹித் சர்மாவே ஊக்கம் பெற்றுள்ளார், சூப்பர் ஓவரில் அந்த 2 சிக்சர்கள் எப்படி தன்னம்பிக்கை என்பது அணி முழுதும் பரவியுள்ளது என்பதை விளக்கும் உதாரணமாகும்.

கோலியின் வெற்றியில் இன்னொரு இந்திய கிரிக்கெட் அம்சம் என்னவெனில் 3 வடிவங்களிலும் வீரர்கள் மாறிக்கொண்டேயிருந்தாலும் சீராக வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.

கோலியின் கீழ் இந்திய அணி பன்முகத் திறன் கொண்ட அணியாகியுள்ளது. இதனால் அயல்நாடுகளில் அணியின் ஆட்டம் முன்னேறியுள்ளத, என்றார் இயன் சாப்பல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x