Last Updated : 30 Jan, 2020 05:41 PM

 

Published : 30 Jan 2020 05:41 PM
Last Updated : 30 Jan 2020 05:41 PM

ஆஸி.ஓபன்: இறுதிச்சுற்றில் ஜோக்கோவிச்: அரையிறுதியில் நேர்செட்களில் தோல்வியடைந்தார் ஃபெடரர்

மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரை நேர்செட்களில் வீழ்த்தி வெளியேற்றினார் செர்பிய வீரர் ஜோக்கோவிச்.

இறுதிப்போட்டியில் ஜோக்கோவிச் பட்டம் வென்றால், ஆஸ்திரேலியன் ஓபனில் ஜோக்கோவிச்சுக்கு இது 8-வது கோப்பையாக அமையும். ஒட்டுமொத்தமாக 17-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக ஜோக்கோவிச்சுக்கு அமையும்.

ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதியில் 4-வது முறையாக ஃபெடரரை வீழ்த்தியுள்ளார் ஜோக்கோவிச். இதற்கு முன், 2008, 2011, 2016 ஆண்டுகளில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ரோஜரின் நம்பிக்கையைச் சிதறடித்துள்ளார் ஜோக்கோவிச்

மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதலாவதான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிநடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதில் ஆட்டத்தில் உலகின் தலைசிறந்த இரு வீரர்கள் மோதினர். நம்பர் ஒன் வீரரும் செர்பிய நாட்டைச் சேர்ந்தவருமான ஜோக்கோவிச்சை எதிர்கொண்டார் மூத்தவீரரும் முன்னாள் சாம்பியனுமான ரோஜர் ஃபெடரர். இருவரும் 50-வது முறையாகக் களத்தில் சந்தித்தனர்.

2 மணிநேரம் 18 நிமிடங்கள் வரை பரபரப்பா நடந்த இந்த ஆட்டத்தில் ரோஜரை 7-6(7-1), 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்து வெளியேற்றினார் ஜோக்கோவிச்.இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 44 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜோக்கோவிச் 42 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுவரை 50 முறை ஜோக்கோவிச்சும், ரோஜரும் மோதியுள்ளார்கள். அதில் ஜோக்கோவிச் 27 முறையும், ஃபெடரர் 23 முறையும் வென்றுள்ளனர்.

தரநிலையில் 5-வது வீரர் டோமின் தியம், மற்றும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஜெர்வ் ஆகியோருக்கு இடையே நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறுவோருடன் இறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச் விளையாட உள்ளார். ஜோக்கோவிச்சின் அபாரமான திறமைக்கு முன் இரு வீரர்களும் நிச்சயம் மண்ணில் சாய்வார்கள்.

இதுவரை 7 முறை ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஜோக்கோவிச் அனைத்திலும் வென்றுள்ளார். இந்தமுறை வென்றால், அது 8-வது பட்டமாக அமையும்.

முதல் செட்டில் 2-5 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில்தான் ஜோக்கோவிச் இருந்தார். ஆனால், அதன்பின் ஏஸ்களிலும், பந்தைத் திருப்பி அனுப்புவதிலும் பெடரருக்கு கடும் சவால் அளித்தார். இதனால் முதல்செட்டடை டைபிரேக்கர் மூலம் ஜோக்கோவிச் கைப்பற்றி அதிர்ச்சி அளித்தார்

2-வது செட்டிலும், 3வது செட்டிலும் பெடரரை எளிதாக நேர்செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ஜோக்கோவிச் முன்னேறினார்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடும் மிகவும் வயதான வீரரா என்ற பெயருடன்ஃபெடர் விளையாடினார். கடந்த 1991-ம் ஆண்டு ஜிம்மி கானருக்கு அடுத்தாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறிய வீரர் எனும் பெருமையைப் பெற்றிருந்த பெடரர் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த கனவை ஜோக்கோவிச் தகர்த்துவிட்டார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x