Published : 30 Jan 2020 12:33 PM
Last Updated : 30 Jan 2020 12:33 PM

யாருக்கும் தெரியாத தோனியின் இன்னொரு முகம்; தோல்வி வேதனைக்கு அளித்த மருந்து-  சுனில் சுப்ரமணியனின் நெகிழ்ச்சியான பகிர்வு

எம்.எஸ். என்று செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி ஒரு பன்முக ஆளுமை கொண்டவர் என்பதை நிரூபிக்கும் விதமாக முன்னாள் தமிழக வீரரும் இந்திய அணியின் முன்னாள் நிர்வாக மேலாளருமான சுனில் சுப்ரமணியன் சில தகவல்களை ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்காகப் பகிர்ந்து கொண்டார்.

சுனில் சுப்ரமணியன் 2017 ஆகஸ்ட் முதல் 2019 செப். வரை இந்திய அணியின் நிர்வாக மேலாளராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, அந்தக் காலக்கட்டங்களில் இந்திய அணியுடன் அவர் இருந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்வில்தான் டிசம்பர் 2017-ல் தரம்சலாவில் போட்டி ஒன்றின் போது மறுநாள் காலை வரை இந்திய அணி வீரர்களிடையே நடந்த ‘அந்தாக்‌ஷரி’ பாட்டுப்போட்டி நிகழ்ச்சியை சுனில் சுப்ரமணியன் அசைபோட்டார்.

அந்தாக்‌ஷரி என்றால் ஒருவர் ஒரு பாடலைப் பாடும் போது அவர் முடிக்கும் கடைசி எழுத்திலிருந்து அடுத்து உள்ளவர் இன்னொரு பாடலைப் பாட வேண்டும். இலங்கைக்கு எதிரான தரம்சலா ஒருநாள் போட்டியின் போது இரவில் கடும் குளிரில் இந்திய அணியினர் தீமூட்டி அதைச் சுற்றி அமர்ந்து அந்தாக்‌ஷரி விளையாடினர். இரவு 8 மணிக்கு இந்த அந்தாக்‌ஷரி தொடங்குகிறது என்று கூறிய சுனில் சுப்ரமணியன்,

“மெதுவே நாங்கள் அந்தாக்‌ஷரியில் இந்திப் பாடல்களை பாட ஆரம்பித்தோம், அந்தாக்‌ஷரி சென்று கொண்டே இருந்தது, களத்தில் எப்படியோ அப்படித்தான் இதிலும் தோனி மைய இடம் பிடித்தார், அசத்தினார். இந்தி திரை இசைப்பாடல்கள் பற்றிய தோனியின் அறிவு அனைவரையும் பிரமிக்க வைத்தது. 1960கள், 70கள், 80-ம் ஆண்டுகளின் பிரமாதமான இந்திப் பாடல்களை தோனி வெளுத்து வாங்கினார். 1950-களின் சில பாடல்களையும் அவர் பாடினார். கிஷோர் குமார், முகமட் ரஃபி, முகேஷ் .. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூறுங்கள், தோனி கைவசம் பாடல்களை வைத்திருப்பார்.

பாடும்போது தோனியின் குரல் கணீரென்று ஒலிக்கும், அவர் இதயபூர்வமாக அவ்வளவு பற்றுடன் இந்திப் பாடல்களைப் பாடினார். மிக நன்றாக பாடினார் தோனி, அந்தாக்‌ஷரியும் களைக்கட்டியது, தோனியின் குரல் அனைவரையும் கட்டிப்போட்டது. அதிகாலை 2 மணி வரை பாடிக்கொண்டேதான் இருந்தோம், இலங்கையிடம் அடைந்த தோல்வியின் வலி அகன்றது. இந்திய அணி புத்துணர்வு பெற்றது, தொடரை வென்றது.” என்றார் சுனில் சுப்ரமணியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x