Published : 30 May 2014 09:52 PM
Last Updated : 30 May 2014 09:52 PM

ரெய்னா விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தி பஞ்சாப் இறுதிக்கு தகுதி

மும்பையில், கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 2-வது ப்ளேஆஃப் போட்டியில் சென்னை 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த வெற்றியால் பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. சென்னை அணியின் ரெய்னா அதிரடியாக 25 பந்துகளில் 87 ரன்களைக் குவித்தும், தொடர்ந்து வந்த வீரர்கள் சரியாக ஆடாததால் சென்னை தோல்வியுற்றது.



மிகக் கடினமான இலக்கை விரட்ட ஸ்மித் மற்றும் டு ப்ளெஸ்ஸி இருவரும் களமிறங்கினர். ஸ்மித் முதல் பந்தில் 1 ரன்க் எடுக்க 2-வது பந்தில் ப்ளெஸ்ஸி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

அடுத்த ஓவரில் மேலும் 2 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் விளாசிய ரெய்னா ஆட்டத்தை மெதுவாக சென்னையின் பக்கம் எடுத்து வர முயற்சி செய்தார். அடுத்தடுத்து பந்து வீசிய அவானா, ஜான்சன், சந்தீப் சர்மா என அனைவரையும் ரெய்னா பந்தாடினார். 16 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது வேகமான அரை சதம் என்ற சாதனையையும் படைத்தார்.

5-வது ஓவரில் ஸ்மித் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அதிரடியை நிறுத்தாத ரெய்னா அவானா வீசிய 6-வது ஓவரில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் (1 நோ பால்) 33 ரன்களை குவிக்க, பவர்ப்ளே முடியும்போது சென்னை சரியாக 100 ரன்களை எட்டியது.

6-வது ஓவரின் முதல் பந்தை சந்தித்த மெக்கல்லம், கவர் பகுதியில் இருக்கும் ஃபீல்டரிடம் அடித்து விட்டு, தயக்கத்துடன் ரன் ஓட முயல, மறுமுனையில் ரெய்னா க்ரீஸ் எல்லையைத் தொடுவதற்குள், பெய்லி ஸ்டம்பை நேரடியாகத் தாக்க, துரதிர்ஷ்டவசாமக 87 ரன்களுக்கு (25 பந்துகள், 12 பவுண்டரி, 6 சிக்ஸர்) ரெய்னா வீழ்ந்தார். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்தக் கட்டத்திலும் சென்னை அணியின் ரன் ரேட் ஒரு ஓவருக்கு 14 ரன்களுக்கு மேல் இருந்தது.

அடுத்து களமிறங்கிய ஜடேஜா, வேகமாக ரன் சேர்க்க முயன்றாலும், ஒரு ரன், இரண்டு ரன்கள் என்றே எடுக்க முடிந்தது. 12-வது ஓவரில் மெக்கல்லம் 11 ரன்களுக்கு ரன் அவுட் ஆக, அடுத்த ஓவரில் ஜடேஜா அவானாவின் பந்தில் 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். களத்தில் இருந்த ஹஸ்ஸியும் 1 ரன்னுக்கு அதே ஓவரில் வெளியேற, மேற்கொண்டு பேட்ஸ்மென் யாரும் இல்லாததால், ஆட்டத்தை தோனி மட்டுமே காப்பாற்ற முடியும் என்று சூழல் ஒட்டு மொத்தமாக பஞ்சாபிற்கு சாதகமாக மாறியது.

அஸ்வின் மறுமுனையில் இருக்க, தோனி தனியாக வெற்றிக்கு போராடினார். அஸ்வினும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க சென்னையின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து, சென்னை அணியின் ஸ்கோரை 200 ரன்களைத் தாண்டி எடுத்துச் சென்றார். 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பஞ்சாப், இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கவுள்ளது. முதல் முறையாக பஞ்சாப் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பஞ்சாபை பேட்டிங் செய்ய அழைத்தது. துவக்க வீரர்களான சேவாக் மற்றும் வோஹ்ரா இருவரும் சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். குறிப்பாக ஈஷ்வர் பாண்டே வீசிய 4-வது ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. முதல் 6 ஓவர்களுக்குள் 70 ரன்களை இந்த துவக்க இணை எடுத்தது. இதில் 8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். சேவாக் 21 பந்துகளில் அரை சதம் தொட்டார்.

11-வது ஓவரில் வோஹ்ரா 34 ரன்களுக்கு பாண்டேவின் பந்தில் வீழ்ந்தார் (31 பந்துகள், 1 பவுண்டரி, 2 சிக்ஸர்). அடுத்து மேக்ஸ்வெல் களமிறகினாலும் சேவாக் தனது விளாசலைத் தொடர்ந்தார்.

அஸ்வின் வீசிய 13-வது ஓவரின் 2-வது பந்தில் சேவாக் ஒரு சிக்ஸர் அடிக்க, 5-வது பந்தை மேக்ஸ்வெல்லும் சிக்ஸருக்கு சுழற்றினார். ஆனால் அடுத்த பந்திலும் சிக்ஸர் அடிக்க முயன்ற அவர் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்திற்கு முன்னால், "அடுத்தப் போட்டியில் நான் அதிகம் ஓவர் தி விக்கெட்டில் வீசுவேன் என்பதை மேக்ஸ்வெல் எதிர்பார்க்கலாம்" என அஸ்வின் சவால் விட்டிருந்தார். அந்த முறையிலேயே இன்று பந்துவீசி முதல் பந்தில் ஆறு ரன்கள் கொடுத்தாலும், அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

16-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்த சேவாக் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 50 பந்துகளில் விரைவாக சதம் எட்டிய சேவாக், அதில் 10 பவுண்டரிகளும், 6 சிக்ஸரும் அடித்திருந்தார். மறுமுனையில் இருந்த மில்லரும், தன் பங்கிற்கு பந்துவீச்சாளர்களைக் கலங்கடித்தார். 17.2 ஓவர்களிலேயே பஞ்சாப் 200 ரன்களை எட்டியது.

நேரா வீசிய 19-வது ஓவரில் சேவாக் ஒரு 122 ரன்களுக்கு (57 பந்துகள், 12 பவுண்டரி, 8 சிக்ஸர்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்தக் கட்டத்தில் பஞ்சாப் 211 ரன்களை எட்டியிருந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் பெய்லி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மில்லர் 38 ரன்களுக்கு (19 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) ரன் அவுட் ஆனார். அதே ஓவரின் கடைசி பந்தில் சாஹாவும் 6 ரன்களுக்கு வீழ்ந்தார்.

இறுதியில், பஞ்சாப் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

சென்னையின் பரிதாபப் பந்துவீச்சு

சென்னையின் பந்துவீச்சு இன்றைய போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது. வீரர்களின் உடல் மொழியும் தளர்ந்தே காணப்பட்டது. சேவாக், வோஹ்ரா, மில்லர் என அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தால் சென்னை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பாண்டேவைத் தவிர பந்து வீசிய அனைவரும் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கும் அதிமாகவே கொடுத்திருந்தனர். தனக்கான 4 ஓவர்களில் நேரா 51 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும், சர்மா 46 ரன்களும், அஸ்வின் 44 ரன்களும் அளித்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x