Published : 16 Jan 2020 01:06 PM
Last Updated : 16 Jan 2020 01:06 PM

பால் ஸ்டெர்லிங்கின் 47 பந்து 95 ரன் விளாசல்: உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸுக்கு  ‘த்ரில்’ அதிர்ச்சியளித்த அயர்லாந்து 

மே.இ.தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி முதல் டி20 போட்டியில் செயிண்ட் ஜார்ஜ் மைதானதில் டி20 உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது அயர்லாந்து.

அயர்லாந்து வீரர் பால் ஸ்டெர்லிங் 47 பந்துகளில் 95 ரன்களை விளாச அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. டிவைன் பிராவோ நீண்ட காலத்துக்குப் பிறகு சர்வதேச டி20யில் ஆடி 4 ஓவர்களில் சிக்கனமாக வீசி 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தொடந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளுக்கு 204 வரை வந்து தோல்வி கண்டது. படு த்ரில்லாக அமைந்த போட்டியில் டிவைன் பிராவோ மட்டும் பிரமாதமாக வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லையெனில் அயர்லாந்து அணி 240-250 ரன்களை எட்டியிருக்கும். ஆனால் அயர்லாந்தின் பீல்டிங் உண்மையில் வெற்றி தேடித்தந்தது என்றால் மிகையாகாது.

பால் ஸ்டர்லிங், கெவினோ பிரையன் காட்டடி, பிராவோ அபாரம்:

அயர்லாந்து இன்னிங்ஸில் பால் ஸ்டர்லிங், அதிரடி வீரர் கெவினோ பிரையன் தொடக்கத்தில் களமிறங்கினர். 12.3 ஒவர்களில் 153 ரன்களைக் குவித்தனர். டி20யில் 2000 ரன்களை கடந்த 8 வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னரின் ஸ்ட்ரைக் ரேட்தான் அதிகபட்சமாக 140.85. அதற்கு அடுத்த இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங் 139.77.

பால் ஸ்டர்லிங், கெவினோ பிரையன் அடித்த அடியில் 6 ஓவர்களில் 93 ரன்கள் விளாசப்பட்டது, பவர் ப்ளே சாதனை இதுதான். குட் லெந்த் அதற்கு அருகில் வரும் பந்துகளை பால் ஸ்டர்லிங் செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தின் ஸ்டாண்ட்களுக்கு அனுப்பினார். மறுமுனையில் கெவினோ பிரையன் ஷார்ட் பிட்ச் பந்துகளை சிக்சருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். 12 ஓவர்களில் 153 ரன்கள் என்பது அயர்லாந்து முதல் விக்கெட்டுக்காக சேர்த்த டி20 சாதனையாகும்.

டிவைன் பிராவோ வந்தவுடன் முதல் ஓவரில் 18 ரன்கள் கொடுத்தார், பால் ஸ்டர்லிங் இவரை 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று பின்னினார். ஸ்லோ பந்துகள் எல்லாம் சிக்ஸ். காரணம் பிட்ச் பிளாட் பிட்ச், ஸ்லோ பந்துகள் என்றால் நின்று வந்தால்தான் விக்கெட், இல்லையெனில் அல்வா ரகப் பந்துதான் அதனால்தன டிவைன் பிராவோ தன் உத்தியை மாற்றி யார்க்கர்களை வீசத் தொடங்கினார், இதில் 2ஐ தடுத்தாடிய கெவினோ பிரையன் 3வது பந்து இன் டக்கர் ஆக அமைய பவுல்டு ஆனார். பிரையன் 32 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 48 ரன்களில் வெளியேறினார்.

இதனை பிராவோ தொடங்க அயர்லாந்து அணி 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிரடி தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங்கும் ஸ்லாக் ஸ்வீப்பில் வீழ்ந்தார். பால் ஸ்டர்லிங் 47 பந்துகளைச் சந்தித்து 6 நான்குகள் 8 ஆறுகள் என்று அசத்தி ஆட்டமிழந்தார். டெலானி 19 ரன்களையும் வில்சன் 17 ரன்களையும் எடுக்க அயர்லாந்து 208 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. காட்ரெல், பியர், பிராவோ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மே.இ.தீவுகளின் அதிரடி தொடக்க வீரர்கள் ஓவருக்கு 10 ரன்கள் இலக்கை எப்படி விரட்டுவது என்பதை அறிந்திருந்தனர். 10 ஓவர்களில் அந்த அணி 105/2 என்று கொண்டு வந்தது. சிம்மன்ஸ் 14 பந்துகளிலி 22 ரன்களை எடுக்க எவின் லூயிஸ் 29 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 53 ரன்களை எடுத்தார். ஹெட்மையர் இறங்கி தன் பங்குகு 3 சிக்சர்களுடன் 18 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். கெய்ரன் பொலார்ட் 15 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது 14.2 ஓவர்களில் மே.இ.தீவுகள் 150/4 என்று இருந்தது.

அதன் பிறகு நிகோலஸ் பூரன், ருதர்போர்ட் இருவரும் தலா 26 ரன்கள் எடுக்க ஸ்கோர் 20வது ஓவரில் 196/6 என்று இருந்தது.

முன்னதாக வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிவைன் பிராவோவை 9 ரன்களில் ஆல்ரவுண்டர் ஜோஷ் லிட்டில் (3/29) வீழ்த்தினார். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் விழ கடைசி பந்தில் 5 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் ஹெய்டன் வால்ஷ் காற்றில் மட்டையைச் சுழற்ற மே.இ.தீவுகள் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. அயர்லாந்துக்கு எதிராக மே.இ.தீவுகளின் 2வது தோல்வியாகும் இது. ஆட்ட நாயகனாக பால் ஸ்டர்லிங் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x