Published : 13 Jan 2020 01:04 PM
Last Updated : 13 Jan 2020 01:04 PM

யோ-யோ சோதனையெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல, தூக்கத்தில் பாஸ் செய்து விடுவாராம் ஹர்திக் பாண்டியா

நியூஸிலாந்து ஏ தொடருக்கான இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் விலகிக் கொண்டார் ஹர்திக் பாண்டியா, இது பலருக்கும் என்ன சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றால் உடற்தகுதி சோதனையில் பாண்டியா தேறவில்லை என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அவர் முதுகு இன்னும் முற்றிலும் குணமடையவில்லை, பாண்டியாவுக்கே திருப்தி தராததால் அவர் விலகிக் கொண்டதாக பிசிசிஐ-யைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் ஐ.ஏ.என்.எஸ். செய்தி ஏஜென்சிக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் ஐஏஎன்எஸ் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்ததாவது, “சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கு முன்னால் காயமடைந்த பவுலர்களுக்கு தீவிர பணிச்சுமை சோதனை நடக்கும் ஆனால் அவர் அந்தச் சோதனைக்குப் பிறகு தன் உடல் தகுதி மேலேயே அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.
2-3 மணி நேரம் பாண்டியா பந்து வீசினார். அந்தக் காலக்கட்டத்தில் அவரது பந்து வீச்சின் ரிதம், வேகம், துல்லியம், திட்டத்துடன் எப்படி அவர் உடல் ஒத்துழைக்கிறது போன்றவை பயிற்சியின் போது கண்காணிக்கப்படும்.

வீரரின் மனதில் உள்ளதை உடல் அனுமதிக்கவில்லை என்றால் பணிச்சுமைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்று அர்த்தம். பாண்டியாவும் தன் முதுகு இன்னும் கொஞ்சம் குணமடைய வேண்டும் என்று விரும்பினார்

மற்றபடி இந்த யோ-யோ போன்ற டெஸ்ட்களையெல்லாம் பாண்டியா தூக்கத்தில் பாஸ் செய்யக்கூடியவர். தென் ஆப்பிரிக்க தொடருக்குத்தான் வருவதாக திட்டமிட்டுள்ளார், அதுவரை எந்த ஒரு ரிஸ்கையும் அவர் எடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது” என்றார் அந்த பிசிசிஐ அலுவலர்

இதில் ஆச்சரியம் என்னவெனில் ஐ.ஏ.என்.எஸ். ஏஜென்சியிடம் பாண்டியா பேசும்போது, “நியூஸிலாந்து தொடரின் 2வது பாதியில் திரும்பி விடுவேன்” என்றார். ஆனால் இப்போதைக்கு ஹர்திக் பாண்டியா வர முடியாது போல்தான் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x