Published : 08 Jan 2020 06:39 PM
Last Updated : 08 Jan 2020 06:39 PM

ராகுல் விரைவில் டெஸ்ட்டில் 50 பந்துகளில் சதமெடுப்பார்; தவண் தடுமாறுகிறார்- கவுதம் கம்பீர் கருத்து

இலங்கைக்கு எதிராக நேற்று இந்தூரில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆட்டத்தில் ராகுலின் அபார ஆட்டத்தை கவுதம் கம்பீர் விதந்தோதியுள்ளார்.

32 பந்துகளில் 45 ரன்கள் விளாசிய கே.எல்.ராகுலினால் இந்திய அணி வெகு எளிதாக இலக்கை விரட்டியது, விரட் கோலி தன் பங்குக்கு சச்சின் பாணி புல் ஷாட்டில் லாங் லெக்கில் சிக்ஸ் அடித்து வெற்றி ரன்களை விளாசியதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தொலைக்காட்சியில் கம்பீர் கூறும்போது, “ராகுல் நம்ப முடியாத பார்மில் இருக்கிறார், விரைவில் டெஸ்ட் போட்டியில் 50 பந்துகளில் சதமெடுப்பார்.
ஒவ்வொரு முறை ராகுல் ஆடும்போதும் இவர் ஏன் இதே பாணியை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடைபிடிக்கக் கூடாது என்று நினைப்பேன்.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமல்ல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் சில வேளைகளில் கூண்டுக்குள் பதுங்கி ஆடுகிறார். அவரிடமுள்ள பேட்டிங் தரம் உண்மையில் ஒருநாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 பந்துகளி சதம் எடுப்பார் என்றே தோன்றுகிறது.

அவரிடம் உள்ள ஷாட்கள் அபாரமானது.

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட்டுடன் நாம் ஒப்பிட முடியாது, இதில் தொடக்க வீரராக இறங்கினால் வேறு வீரர்கள் யாரும் போட்டிக்கு இருக்க மாட்டார்கள், ஆனால் டெஸ்ட்டில் அப்படியல்ல. யார் வேண்டுமானாலும் இடத்தை இழந்து வேறொருவர் வர வாய்ப்புள்ளது. இன்று ஷிகர் தவண், ராகுல் இருவரையும் பார்க்கும் போதும் யார் பெட்டர் பார்மில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஷிகர் தவண் சரளமாக ஆடவில்லை, தடுமாறினார், ஆனால் ரன்களை எடுத்ததன் மூலம் அவருக்கு தனிப்பட்ட முறையில் நம்பிக்கை இருக்கும்” என்றார்.

வரும் வெள்ளிக்கிழமை புனேயில் இலங்கைக்கு எதிராக 3வது இறுதி டி20 நடக்கிறது, அடுத்து ஆஸி.க்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் உள்ளன. இது ஜனவரி 14ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x