Published : 02 Jan 2020 09:09 AM
Last Updated : 02 Jan 2020 09:09 AM

‘ விமர்சனங்கள், எதிர்பார்ப்புகள் பாதிக்காது’ ஒலிம்பிக்கில் மீண்டும் பதக்கம் வெல்வதே இலக்கு: மனம் திறக்கிறார் பி.வி.சிந்து

விமர்சனங்களோ அல்லது எதிர்பார்ப்புகளோ தன்னை ஒருபோதும் பாதிக்காது என இந்திய பாட்மிண்டன் நட்சத்திரமான பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து அதன் பின்னர் ஆண்டு நிறைவடையும் வரை எந்த ஒருதொடரையும் வெல்லவில்லை. இதில் கடந்த மாதம் நடைபெற்ற உலக டூர் பைனல்ஸ் தொடரும் அடங்கும். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பி.வி.சிந்து அந்தத் தொடரில் 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்து வெளியேறினார்.

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தாலும் மனம் தளராத சிந்து வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தற்போதே தீவிரமாக தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

உலக சாம்பியன்ஷிப் தொடர் எனக்கு சிறப்பான முறையில் அமைந்திருந்தது. ஆனால் அதன்பின்னர் பல்வேறு தொடர்களில் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தேன். எல்லாஆட்டங்களிலும் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. சில நேரங்களில் அற்புதமாக விளையாடலாம், சில நேரங்களில் தவறுகள் நேரிடலாம்.

தவறுகளில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன். என்னை பொறுத்தவரையில் நேர்மறையாக இருப்பதும், வலுவாக திரும்பி வருவதும் மிகவும் முக்கியமானது. நிச்சயமாக என் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் அழுத்தம் மற்றும் விமர்சனங்கள் என்னை பாதிக்காது. ஏனெனில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

யாராக இருந்தாலும் ஒலிம்பிக்கில் சாதிப்பதேஇலக்காக இருக்கும். உத்தி ரீதியான செயல்பாடு, நிபுணத்துவத்தில் அதிக கவனம் செலுத்திவருகிறேன். அனைத்தும் சரியாக திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் சீசனில் இது சரியாக அமையும்.

மல்யுத்த வீரரான சுஷில் குமார் மட்டுமேஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ளார். நாட்டுக்காக அவர் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளார். நானும் சிறப்பாக செயல்பட்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல விரும்புகிறேன். அதற்கு படிப்படியாக செல்ல வேண்டும். கடினமாக பயிற்சிகள் செய்து என்னால் முடிந்த அளவிலான சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டும்.

இது எளிதானது அல்ல. 2020-ம் ஆண்டின் தொடக்கமாக இந்த மாதத்தில் மலேசியா, இந்தோனேஷியா போட்டிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றுகள் நடைபெறுகின்றன. இதனால் அனைத்து தொடர்களுமே முக்கியமானதுதான்.

இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 7 மாத காலங்கள் உள்ளது. இதற்கிடையே வரும் 20-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெற உள்ள பிரீமியர் பாட்மிண்டன் லீக் தொடரில் ஹைதராபாத் அணிக்காக சிந்து களமிறங்குகிறார். இந்த சீசனில் அவரை ஹைதராபாத் அணி ரூ.77 லட்சத்துக்கு ஏலம் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x