Last Updated : 31 Dec, 2019 12:34 PM

 

Published : 31 Dec 2019 12:34 PM
Last Updated : 31 Dec 2019 12:34 PM

ஜடேஜா, ஹர்ஷா போக்ளே குறித்து ‘அநாகரிகமான’ கருத்து:  சஞ்சய் மஞ்சுரேக்கர் வருத்தம்

2019-ம் ஆண்டு தனக்கு தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் ஆய்வாளராக, வர்ணனையாளராக மோசமான ஆண்டு என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சுய விமர்சனம் செய்து கொண்டுள்ளார்.

உலகக்கோப்பையின் போது ரவீந்திர ஜடேஜா மீதும் பிறகு புகழ்பெற்ற வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே மீதும் மஞ்சுரேக்கர் எதிர்மறைக் கருத்துக்களை தெரிவித்து சிக்கிக் கொண்டார்.

நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதியின் போது மஞ்சுரேக்கர், ஜடேஜா பற்றி கூறும்போது, “துண்டு துணுக்கு வீரர்” என்று கூறியது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இவரை ட்விட்டர்வாசிகள் கடும் வசை மழை பொழிந்தனர்.

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்துக்கு அளித்த வீடியோ நேர்காணலில் மஞ்சுரேக்கர் கூறும்போது, “நான் இந்தத் தொழிலுக்கு 1997-98-ல் வந்தேன். எனவே 21 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் 2019 என் வாழ்நாளில் கிரிக்கெட் வர்ணனையாளராக, ஆய்வாளராக மோசமான ஆண்டாகிப் போனது.

ஜடேஜா பற்றி கூறியதில் தவறான புரிதல் இருக்க வாய்ப்பில்லை, நான் என்ன கூறினேனோ அதைத்தான் ஜடேஜா சரியாகப் புரிந்து கொண்டார். ஜடேஜாவை வர்ணிக்க நான் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து நான் வருந்தவில்லை, ‘துண்டு துணுக்கு வீரர்’ என்பது கிரிக்கெட்டில் மிகவும் சகஜமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பதம்” என்றார்.

ஜடேஜா இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, “நீங்கள் ஆடியதை விட இருமடங்கு போட்டிகளில் நான் ஆடிவிட்டேன், இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறேன், சாதனைகளை மதிக்கக் கற்று கொள்ளுங்கள், உங்கள் வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டது, போதும்” என்றார்.

கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்த போது பிங்க் நிறப்பந்து சரியாகத் தெரியுமா என்ற விஷயத்தில் ஹர்ஷா போக்ளே, “டெஸ்ட் முடிந்தவுடன் வீரர்களிடத்தில் பந்து விளக்கு வெளிச்சத்தில் எப்படித் தெரிகிறது என்பது குறித்து வெளிப்படையாக கேட்க வேண்டும்” என்றார்,

வர்ணனையில் இருந்த சஞ்சய் மஞ்சுரேக்கர் இதற்கு, “நாங்கள் விளையாடியிருக்கிறோம் ஹர்ஷா, நீங்கள்தான் வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

ஆனால் இப்போது இந்த கருத்துக்கள் பற்றி சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவிக்கும்போது, “நான் இதனை மிகவும் பொறுப்புடன் அணுக விரும்புகிறேன். ஒரு புறம் நான் தொழில்நேர்த்தியுடன் செயல்படுவதில் பெருமை கொண்டாலும், நான் கட்டுப்பாடு இழக்கும் போது தொழில்பூர்வமற்று இருக்கிறேன். நான் தவறு செய்து விட்டேன், இதற்காக நான் வருந்துகிறேன்.

உணர்ச்சிகள் என்னை மீறி வெளிப்பட்டதற்காக நான் உண்மையில் வருந்துகிறேன். தொழில்பூர்வமில்லை என்பதோடு, அநாகரிகமானதும் கூட. நான் தொலைக்காட்சி தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டேன். நான் அவர்களுக்காகப் பணியாற்றும்போது நான் அப்படி கூறியிருக்கக் கூடாது” என்றார் மஞ்சுரேக்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x