Published : 29 Dec 2019 03:18 PM
Last Updated : 29 Dec 2019 03:18 PM

டாம் பிளெண்டலின் உலகத்தரம் வாய்ந்த சதம் வீண்: பேட்டின்சன், லயன் பந்து வீச்சில் நொறுங்கிய நியூஸி. - தொடரை இழந்தது 

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 247 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது, இதனையடுத்து தொடரை 2-0 என்று கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

4ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சை 168/5 என்று இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. 487 என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய நியூஸிலாந்து 240 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது, கேன் வில்லியம்சன் டக் அவுட் ஆனார். ஆஸி. தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்டுகளையும் பேட்டின்சன் அபாரமான ஒரு ஸ்பெல்லில் நியூஸி.யின் டாப் ஆர்டரை பெவிலியனுக்கு விரட்டி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆனால் நியூஸிலாந்தின் தொடக்க வீரர் டாம் பிளெண்டல் மிகப்பிரமாதமாக ஆடி உலகத்தரம் வாய்ந்த ஒரு சதத்தை (121) எடுத்து 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். மெல்போர்ன் மைதானத்தில் சதம் எடுக்கும் முதல் நியூஸி வீரர் ஆவார் இவர். இவரது 121 ரன்களில் 15 பவுண்டரிகள் அடங்கும். டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார் வில்லியம்சன் என்ற குற்றச்சாட்டை வைக்கலாம், ஆனால் முதலில் பேட் செய்திருந்தால் 4ம் நாளுக்கே ஆட்டம் வந்திருக்குமா என்ற சந்தேகமே நியூஸிலாந்து பேட்டிங்கை பார்க்கும் போது எழுந்தது.

2வது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து அணி 32/0 என்ற நிலையிலிருந்து பேட்டின்சனின் ஆக்ரோஷ வீச்சுக்கு அடுத்த 3 ரன்களில் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 35/3 என்று ஆனது. முதலில் டாம் லேதம் (8) , பெய்ன் பந்து ஒன்று ஸ்விங் ஆகி வெளியே எடுக்க ட்ரைவ் ஆடப்போய் எட்ஜ் ஆனது, டிம் பெய்ன் இடது புறம் டைவ் அடித்து அருமையாகப் பிடித்தார்.

சதம் கண்ட டாம் பிளண்டெல்

கேன் வில்லியம்சன் பேட்டின்சன் பந்துக்கு பேக் அண்ட் அக்ராஸ் சென்றார் பந்து கால்காப்பைத் தாக்க எல்.பி.ஆனார். ரிவியூவும் பலனளிக்கவில்லை காரணம் அது களநடுவர் தீர்ப்பு சரி என்று ஏற்றுக் கொண்டது. இதே ஓவரின் கடைசி பந்தில் அடுத்த அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 2 ரன்களில் பேட்டின்சனின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை கட் ஆட முயன்று மட்டையின் உள்விளிம்பில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார்.

பிளண்டெல், நிகோல்ஸ் (33) இணைந்து ஸ்கோரை 89 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். ஹென்றி நிகோல்ஸ், லயனை ஒரு சிக்ஸ் அடித்த பிறகு அருமையான ஒரு பந்தில் முன்னால் காலை நீட்டி தடுத்தாட முயல பந்துதிரும்பி விக்கெட் கீப்பரிடம் செல்ல நிகோல்சின் பின் கால் கிரீசைத் தாண்டி இருக்க டிம் பெய்ன் ஸ்டம்ப்டு செய்தார்.

பிளண்டெல், இவர் இதற்கு முன்பு தொடக்க வீரராக இறங்கியதில்லை ஆனால் பிரமாதமாக ஆடினார், ஆஸ்திரேலியா இவரை பவுன்சர் சோதனைக்கு உட்படுத்திய போது தயங்காமல் அடித்து ஆடினார், நேராக வீசும் போது லெக் திசையில் ஆடி பிரமாதப்படுத்தினார், 185 பந்துகளில் சதம் எடுத்தார். 121 ரன்கள் எடுத்த நிலையில் மார்னஸ் லபுஷேன் பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆனார். உலகத்தரம் வாய்ந்த சதத்திற்காக மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்தனர்.

இடையில் இவரும் வாட்லிங்கும் இணைந்து 72 ரன்களை 6வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். வாட்லிங், சாண்ட்னர், கிராண்ட் ஹோம் ஆகியோர் லயனிடம் ஆட்டமிழந்தனர். போல்ட் இல்லை, எனவே நியூஸிலாந்து 71 ஓவர்களில் 240 ரன்களுக்குச் சுருண்டது.

ஆட்ட நாயகனாக சதம் கண்ட டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார். சிட்னியில் கடைசி டெஸ்ட் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x