Last Updated : 17 Dec, 2019 07:01 PM

 

Published : 17 Dec 2019 07:01 PM
Last Updated : 17 Dec 2019 07:01 PM

15 ஆண்டுக்கு முந்தைய மோசமான வரலாறு இந்திய அணிக்கு திரும்புமா? தவறுகளைத் திருத்துவாரா கோலி? தொடரை வெல்லத் துடிக்கும் மே.இ.தீவுகள்

விசாகப்பட்டிணத்தில் நாளை பகலிரவாக நடைபெறும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வென்று உள்நாட்டில் வரலாற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

அதேசமயம், கெய்ரன் பொலார்ட் தலைமையிலான மே.இ.தீவுகள் அணி இந்தியாவுக்கு எதிராகக் கடந்த 9 முறை ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது. நாளை ஒரு போட்டியில் வென்றுவிட்டால், கடந்த காலத்துக்கு முடிவுரை எழுதிவிடலாம் என்ற முனைப்பில் களம் காண்கிறது.

15ஆண்டு வரலாறு

இந்திய அணி கடந்த 15 ஆண்டுகளாக உள்நாட்டில் தொடர்ந்து இரு ஒருநாள் தொடர்களை இழந்ததும் இல்லை, தொடர்ந்து 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததும் இல்லை.

ஆனால், கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துவிட்டது.

ஆஸிக்கு எதிராக 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, இப்போது மே.இ.தீவுகள் அணிக்கு எதிராகச் சென்னையில் நடந்த போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய அணி. இதன் மூலம் நான்கு தோல்விகளை இந்திய அணி சந்தித்துள்ளது. நாளை தோல்வி அடையும் பட்சத்தில் 5-வது தோல்வியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தீவிர பயிற்சியில் இந்தியஅணி ஈடுபட்டுள்ளது. இந்திய அணிக்கு பந்துவீசி பயிற்சி அளிக்க இன்று பும்ராவும் சேர்ந்து கொண்டார், உடன் பிரித்வி ஷாவும் இணைந்தார்.

ஜாதவ் ஏன்?

இந்திய அணியைப் பொறுத்தவரை வலுவான பேட்டிங் வரிசைக்கான வீரர்கள் இருந்தபோதிலும் களமிறக்குவதிலும், தொடர்ந்து சோதனை முயற்சிகளை கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்வதும் அணி வீரர்களின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்

ஷிகர் தவணுக்கு பதிலாகத் தேர்வு செய்யப்பட்ட மயங்க் அகர்வால், கூடுதல் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே இருந்தபோதிலும் தொடர்ந்து அவர்களைப் புறக்கணித்து வரும் கோலி, ஏன் கேதார் ஜாதவுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கிறார் எனத் தெரியவில்லை.

5-வது பந்துவீச்சாளர் என்ற முறையில் கேதார் ஜாதவுக்கு வாய்ப்பு அளித்தோம் என்று கோலி பேட்டியில் விளக்கமளித்தாலும், கேதார் ஜாதவை பந்துவீச்சாளராகக் கருதுவதற்கு எந்த அடிப்படை அம்சங்களும் இல்லை.

விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன்தான், ரன்குவிப்பாளர்தான் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால், களத்தில் கேப்டனுக்கான செயல்பாடுகள் அவரிடம் இல்லை. தோனியின் நிழலில் இருந்தவரை வெற்றி மாலை சூடிவந்த கோலி, அவர் இல்லாத நிலையில் தடுமாறியது சென்னைப் போட்டியில் தெளிவாகத் தெரிந்தது.

கவலையளிக்கும் பந்துவீச்சு

இந்திய அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் கவலையளிக்கும் வகையில் இருக்கிறது. சென்னையில் நடந்த போட்டியில் இந்திய அணி வீரர்களின் ஒருவரின் பந்துவீச்சும் மே.இ.தீவுகள் வீரர் ஹோப், ஹெட்மெயருக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் அமையவில்லை.

தற்போதுள்ள மே.இ.தீவுகள் அணியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் புதியவர்கள். அவர்களைச் சமாளித்து நேர்த்தியாகப் பந்துவீச அஸ்வின், உமேஷ் யாதவ் போன்றோருக்கு வாய்ப்பு அளிக்கலாம். ஆனால், ஏன் அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதன் அரசியலும் விளங்கவில்லை.

அதிலும் நாளை போட்டி நடைபெறும் விசாகப்பட்டிணம் மைதானம், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாகும். இந்த மைதானத்தில் சராசரியான ஸ்கோரே 275 ரன்கள் சேர்க்கும் தன்மையுடையது.

கடைசியாகக் கடந்த ஆண்டு இந்தியா, மே.இ.தீவுகள் இடையே ஒருநாள் போட்டியின் போது, 321 ரன்கள் இந்திய அணி சேர்க்க, பதிலுக்கு மே.இ.தீவுகள் அணியும் 321 ரன்கள் சேர்க்க ஆட்டம் டிராவில் முடிந்தது.

தற்போது மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மிரட்டும் பேட்டிங் ஃபார்மில் இருக்கும் போது இந்திய அணியின் இந்த பந்துவீச்சு அவர்களுக்கு நிச்சயம் சவால அளிக்கும்வகையில் இருக்குமா என்பது சந்தேகமே.

ஏனென்றால் கடந்த போட்டியில் 20 ஓவர்களுக்கு மேல் ஹெட்மயரும், ஹோப்பும் எந்தவிதமான சிரமும் இன்றி 103 ரன்களை சேர்த்தனர் என்ற புள்ளிவிவரத்தின் மூலம் இந்திய வீரர்களின் 'பந்துவீச்சு பலத்தை' அறியலாம்.

துபேவுக்கு'பை பை'

கடந்த போட்டியில் பந்துவீசிய குல்தீப் யாதவ், தீபக் சாஹர் சிக்கனமாகப் பந்துவீசியபோதிலும் அவர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. ஷிவம் துபே 8 ஓவர்கள் வீசி 60 ரன்களுக்கு மேல் வாரிவழங்கினார். ஜடேஜாவின் பந்துவீச்சும் சொல்லும் விதத்தில் இல்லை.

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஆல்ரவுண்டர் தேவை என்ற கட்டாயத்தில் விஜய் சங்கரை தேர்வு செய்து கோலி பந்துவீச வாய்ப்பு அளித்தார். அவரின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் உரித்து எடுத்து தொடரை வென்றனர். அதுபோல ஷிவம் துபே நிலை ஆகிவிடக்கூடாது.

ஆதலால், நாளை ஆட்டத்தில் துபே அல்லது ரவிந்திர ஜடேஜா இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக சாஹல் சேர்க்கப்படலாம். கடந்த ஆட்டத்தில் ஷிவம் துபே பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை என்பதால், மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற அடிப்படையில் சர்துல் தாக்கூரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே இந்திய அணிக்கு நெருக்கடியானதுதான்.

பகுதிநேரப் பந்துவீச்சாளர் என்ற அடிப்படையில் கேதார் ஜாதவை தேர்வு செய்வதற்குப் பதிலாகக் கூடுதல் பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் மணிஷ் பாண்டே, மயங்க் அகர்வாலை தேர்வு செய்யலாம்.

வலுவான பேட்டிங்

மற்றவகையில் இந்திய அணியின் பேட்டிங்கை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. ரோஹித் சர்மா மேட்ச் வின்னர் என்பதால், அவர் களத்தில் நின்றுவிட்டால் அவரை அகற்றுவது அசாதாரண காரியம். அதேபோலத்தான் ரன்மெஷின் விராட் கோலி, சென்னை போட்டியில் துரதிர்ஷ்டமாக ஆட்டமிழந்துவிட்டார் என்பதால் அவரின் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் நடுவரிசையில் சிறப்பாக ஆடி தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் கேட்சுகளை கோட்டைவிட்டார்கள் என்பதால் பீல்டிங் துறையில் மே.இ.தீவுகள் அணியோடு ஒப்பிடும்போது இந்திய வீரர்கள் சுமாராகவே இருக்கிறார்கள். அதில் கவனம் செலுத்துவது அவசியம்.

ஐபிஎல் ஏலம்

மே.இ.தீவுகள் அணியைப் பொறுத்தவரை இந்திய அணியுடனான இந்த தொடருக்காகச் சோதனை அடிப்படையில் கேப்டனாக பொலார்ட் நியமிக்கப்பட்டார். டி20 போட்டியில் இந்திய அணிக்கு பொலார்ட் தலைமை கடும் சவாலாக இருந்தது. இப்போது ஒருநாள் தொடரை வென்றுவிட்டால் சிறந்த கேப்டனாக மே.இ.தீவுகள் நிர்வாகத்தால் கொண்டாடப்படுவார்.

கடந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும்வகையில் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி அதில் விக்கெட்டுகளையும் வீழ்த்திக் காட்டினார். தொடக்க வீரர்கள் ஹெட்மெயர், ஷாய் ஹோப் இருவரும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள்.

இதே விசாகப்பட்டிணம் மைதானத்தில்தான் கடந்த ஆண்டு ஷாய் ஹோப் சதம் அடித்தார். காயத்தில் இருந்து லூயிஸ் குணமடைந்துவிட்டார் என்றுதெரிவிக்கப்பட்டாலும் அவர் களமிறங்கவில்லை என்றால் அம்பரிஷ் வாய்ப்பு பெறுவார். ஒருவேளை இவான் லூயிஸ் களமிறங்கினால் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சிக்கல்தான்.

வரும் 19-ம் தேதி ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடக்க இருப்பதால், மே.இ.தீவுகள் அணி வீரர்கள் பலரும் தங்களின் திறமையை வெளிக்காட்ட ஆர்வமாக இருக்கிறார்கள். இது ஒருபுறம் சுயநலமாக இருந்தாலும் அசுரத்தனமான அவர்களினஆட்டம் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியாக இருக்கிறது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசையில் பொலார்ட், பூரன்,ஹோல்டர், கீமோ பால் என வலிமையான வீரர்கள் இருக்கிறார்கள். பந்துவீச்சில் கடந்த போட்டியில் காட்ரெல், அல்சாரி ஜோஸப்,ஹேல்டர் சிக்கனமாகப் பந்துவீசினர். சுழற்பந்துவீச்சில் ஹேடன் வால்ஷ், சேஸ் இருவரும் சுமாராக பந்துவீசினார்கள். பந்துவீச்சைப் பொறுத்தவரை மே.இ.தீவுகள் அணியில் பலவகையிலும் வீரர்கள் இருக்கிறார்கள், சவாலாகவும் இருக்கிறார்கள்.

விசாகப்பட்டிணம் ஆடுகளத்தில் கடைசியாக நடந்த 6 போட்டிகளில் முதலில் பேட்டிங்ச செய்த அணிதான் வென்றுள்ளது என்பதால், நாளை டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். மேலும், இரவு நேரப்பனியும் பந்துவீச்சாளர்களுக்கு சிக்கலை அளிக்கும்.

இந்த முறை ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும் என்ற தீர்க்கம் அவர்களி்ன் விளையாட்டில் தெரிவதால் இந்திய அணிக்கு நாளைய போட்டி சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x