Published : 11 Dec 2019 03:19 PM
Last Updated : 11 Dec 2019 03:19 PM

‘ஸ்மார்ட்’ கிரிக்கெட்தான் எங்கள் ஸ்டைல், ‘அதிரடி’ அவர்கள் ஸ்டைல்: ரோஹித் சர்மா 

2016-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20யின் அரையிறுதியில் இந்திய அணி நிர்ணயித்த 193 ரன்கள் இலக்கை மே.இ.தீவுகள் அணி ஊதி இறுதிக்குச் சென்றது. சார்லஸ், லெண்டில் சிம்மன்ஸ், ஆந்த்ரே ரஸல் ஆகிய பவர் ஹிட்டர்கள் நெஹ்ரா, பும்ரா, ஜடேஜா, அஸ்வின், பாண்டியா ஆகியோரது பந்து வீச்சை வான்கடே மைதானம் நெடுக தெறிக்கவிட்டனர்.

பும்ராவே 4 ஓவர் 42 ரன்கள், ஜடேஜா 4-48, பாண்டியா 4-43, அஸ்வின் 2-20 என்று 10ம் 12ம் வாய்ப்பாடு சொல்ல விட்டனர் மே.இ.தீவுகள் அதிரடி வீரர்கள். 19.4 ஓவர்களில் 196/3 என்று அபார வெற்றி பெற்றது மே.இ.தீவுகள். இந்திய அணி மொத்தம் 4 சிக்சர்கள் 17 பவுண்டரிகள் அடிக்க மே.இ.தீவுகள் 11 சிக்சர்கள் 20 பவுண்டரிகள் விளாசினர்.

இப்படியிருக்கையில் 192 என்ற ஸ்கோர் சுலபமாக 200 ரன்களுக்கும் மேல் ஆகியிருக்க வேண்டும், ஆனால் ரஹானே 35 பந்துகளில் 40 என்று சொதப்பியதாலும் தோனி கடைசியில் 9 பந்துகளில் 1 பவுண்டரி மட்டுமே அடித்து சொதப்பியதாலும் ஸ்கோர் வெற்றி ஸ்கோராக அமையாமல் போனது. இது வரலாறு.

இந்நிலையில் எங்களுக்கு ஸ்மார்ட் கிரிக்கெட்தான் பிடிக்கும் ஒன்று இரண்டு என்று ரிஸ்க் இல்லாமல் ஒவருக்கு 8-9 ரன்கள் அடிப்பதே எங்கள் ஸ்டைல் என்று தொடக்க வீரர் ரோஹித் சர்மா தெரிவித்திருப்பதை எப்படிப் பார்ப்பது?

முதலில் அவர் கூறியது என்னவென்பதைப் பார்ப்போம்:

இந்த டி20 வடிவமே ரிஸ்க்குகள் எடுத்து ஆடி ஆதிக்கம் செலுத்தும் வகைதான், ஆனால் எங்களால் ஒரு அணியாக என்ன செய்ய முடியுமோ அதுதான் முக்கியம். எதிரணி என்ன செய்கிறார்களோ, அல்லது என்ன செய்ய முயற்சிக்கிறார்களோ அதை அப்படியே நகல் எடுப்பது நம் அணியின் பழக்கமல்ல. சில பந்துகளை சாதாரணமாக ஆடிவிட்டு பெரிய ஷாட்களுக்குச் செல்வது அவர்கள் பாணி. ஆனால் எங்கள் பாணி சிங்கிள்கள், இரண்டுகள் என்று எடுத்து ரிஸ்க் எடுக்காமல் 8-9 ரன்களை ஓவருக்கு எடுப்பதே.

தேவைப்பட்டால் நாங்களும் ரிஸ்க் எடுத்து ஆடுவோம், ஆனால் ஸ்மார்ட் கிரிக்கெட் தான் ஆட விருப்பம். இப்படியாகத்தான் எதிரணிகளை வீழ்த்த முடியும். சில வேளைகளில் ஸ்மார்ட் கிரிக்கெட் கைகொடுக்கும் சில வேளைகளில் கை கொடுக்காது, ஆனால் நாங்கள் அந்தப் பாணியைத்தான் நம்புகிறோம். சிங்கிள்களா, இரண்டுகளா அல்லது பந்து வீச்சை அடித்து நொறுக்குவதா என்பதை சூழ்நிலையே தீர்மானிக்கும். ஆனால் கடைசியில் ஸ்மார்ட்டாக ஆடுவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.

மே.இ.தீவுகள் அணி எதிர்பாராத விதத்தில் ஆடும் அணி, அன்று பார்த்தோமே. முதல் போட்டியிலேயே பிரமாதமாக ஆடினார்கள், விராட் கோலியின் பிரில்லியன்ஸ் நம்மை கரை சேர்த்தது.

கிரண் பொலார்டை எனக்கு நன்றாகத் தெரியும் அவர் தன் அணியிடமிருந்து என்ன எதிர்பார்ப்பார் என்பதும் எனக்குத் தெரியும். இந்த மே.இ.தீவுகள் வித்தியாசமான அணி, எனவே இவர்களை வீழ்த்த நாம் சிறப்பாக ஆட வேண்டுமென்பதை அறிந்திருக்கிறோம்.

வான்கடே மைதானம் நான் விளையாடிய வரையில் விரட்டலுக்கு உகந்த மைதானம் என்பதே என் அனுபவம்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

ஆனால் ஸ்மார்ட் கிரிக்கெட்டினால்தான் உலக டி20 அரையிறுதியில் 200க்கும் மேல் செல்ல வேண்டிய இலக்கு 192-ல் முடிந்தது. இன்றைய டி20 கிரிக்கெட் அதிரடி கிரிக்கெட்டாக மாறிவிட்டது. ஸ்மார்ட் கிரிக்கெட் என்றால் அன்று 2வது டி20 போட்டியில் கடைசி 4 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்ததா? ரோஹித் சர்மா ஸ்மார்ட் கிரிக்கெட் என்றால் என்னவென்பதை விளக்கினால் நல்லது.

ஒன்று அதிரடி வீரர்கள் கைவசம் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அணியில் தங்களை தக்கவைக்கும் நோக்கத்துடன் ஆடிவிட்டு அதையே ரிஸ்க் ஃப்ரீ கிரிக்கெட், ஸ்மார்ட் கிரிக்கெட் என்று உயர்த்திப் பிடிக்க வேண்டும். இதில் ரோஹித் சர்மா 2-வது கருத்தை பாதி உண்மையுடன் கூறுகிறார் என்றே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x