Last Updated : 01 Dec, 2019 01:15 PM

 

Published : 01 Dec 2019 01:15 PM
Last Updated : 01 Dec 2019 01:15 PM

லாராவின் 400 ரன் சாதனையை முறியடிக்க ஒருவரால் மட்டுமே முடியும்: வார்னர் குறிப்பிட்ட இந்திய பேட்ஸ்மேன் யார்? சேவாக்குக்குப் புகழாரம்

ஆஸி. வீரர் டேவிட் வார்னர் : கோப்புப்படம்

அடிலெய்ட்

மே.இ.தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா டெஸ்ட் போட்டியில் வைத்துள்ள அதிகபட்ச ரன் குவிப்பான 400 ரன்கள் சாதனையை முறியடிக்க இந்திய வீரர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. வார்னரின் முச்சதம், லாபுசாங்கேயின் சதம் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 335 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன் குவிப்பு சாதனையை பிரையன் லாரா வைத்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக லாரா 400 ரன்கள் சேர்த்ததே இதுவரை சாதனையாக இருக்கிறது. இந்த சாதனையை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.

ஆனால், லாராவின் சாதனையை எட்டுவதற்கு வார்னருக்கு 65 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில், திடீரென டிக்ளேர் செய்வதாக கேப்டன் பைன் அறிவித்தார். இதற்கு ட்விட்டரில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது, லாராவின் சாதனையை முறியடிப்பீர்கள் என எதிர்பார்த்தோம். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, இனிவரும் காலங்களில் யாருக்கு எந்த வாய்ப்பு கிடைக்கும், யார் முறியடிப்பார் என நினைக்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு வார்னர் கூறுகையில், " என்னைப் பொறுத்தவரை இந்த மைதானத்தில் பவுண்டரி அடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. பவுண்டரிகள் தொலைவில் இருந்ததால் அடித்தாலும் செல்வதில் சிரமம் இருந்தது. அதிலும் சோர்வு ஏற்படும்போது ரன்களைக் குவிக்க முடியவில்லை.

என்னால் லாராவின் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், லாராவின் சாதனையை முறியடிக்கும் ஒருவீரரின் பெயரை நான் குறிப்பிடமுடியுமென்றால், அது இந்திய வீரர் ரோஹித் சர்மா மட்டுமே. உறுதியாக அவரால் லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிக்க முடியும்.

நான் டெஸ்ட் விளையாடுவது அதிகமாக ஊக்குவித்தவர் வீரேந்திர சேவாக். நான் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்தேன். அப்போது, ஒருநாள் என் அருகே அமர்ந்து சேவாக் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, நீங்கள் டி20 வீரராக வருவதைக் காட்டிலும் சிறந்த டெஸ்ட் போட்டி வீரராக வருவீர்கள். நான் கூறினேன், என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. நான் முதல்தரப் போட்டிகள் அதிகமாக விளையாடியதில்லை என்றேன்.

ஆனால் சேவாக் எப்போதுமே என்னிடம், ஸ்லிப் ஃபீல்டிங் இருக்கிறது, கல்லியில் வீரர்கள் இருக்கிறார்கள், கவர் திசையில் ஆள் இல்லை, மிட் விக்கெட்டைப் பார், பந்தைத் தூக்கி அடி, என நுணுக்கங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். அது என்னுடைய மனதில் பதிந்துவிட்டது, அது இப்போது எனக்குக் களத்தில் எளிதாக விளையாட உதவுகிறது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x