Published : 28 Aug 2015 03:14 PM
Last Updated : 28 Aug 2015 03:14 PM

அக்சர் படேல் 6 ஓவர் 6 மெய்டன் 4 விக்கெட்: தென் ஆப்பிரிக்கா ஏ இன்னிங்ஸ் தோல்வி

அக்சர் படேலின் அதிசயிக்கத் தக்க ஆல் ரவுண்ட் திறமையில் தென் ஆப்பிரிக்கா ஏ அணி இன்னிங்ஸ் தோல்வி கண்டது.

வயநாடில் உள்ள கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமில்லாத டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 260 ரன்களுக்குச் சுருண்டதில் அக்சர் படேல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணியில் ஜிவாஞ்ஜோத் சிங் 52, அபிநவ் முகுந்த் 72, கேப்டன் ராயுடு 71, பேட்டிங்கில் அக்சர் படேல் 69 ரன்களை எடுக்க 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 417 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

157 ரன்கள் பின் தங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 4-ம் நாளான இன்று களமிறங்கி 76 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதில் அக்சர் படேல் 6 ஓவர்கள் வீசி 6 மெய்டன்களுடன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை அக்சர் படேல் கைப்பற்றியதோடு, பேட்டிங்கிலும் சிறப்பாக விளங்கி 69 ரன்கள் விளாசியுள்ளார்.

இன்று முதலில் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் என்ற வீரரை 4-வது ஓவரில் வீழ்த்தினார் அக்சர் படேல். 14-வது ஓவரில் வான் ஸில், குளூட் என்று விக்கெட்டுகளை இழந்து 23/3 என்று ஆனது. 16-வது ஓவரில் தென் ஆப்பிரிக்க சர்வதேச அணியில் இடம்பெற்ற பவுமாவை அக்சர் படேல் பவுல்டு செய்தார்.

பிறகு டி.ஜே.விலாஸ், மற்றும் பியட் ஆகியோரையும் அக்சர் படேல் வீழ்த்தினார். ஆனால் ஒரு ரன்னை கூட அவரது 36 பந்துகளில் தென் ஆப்பிரிக்கா ஏ- அணியினால் எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குவிண்டன் டி காக் மட்டுமே 20 ரன்கள் என்ற அதிகபட்ச ரன்களை எடுத்தார். 31.4 ஓவர்களில் 76 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியடைந்ததோடு, 2 போட்டிகள் கொண்ட தொடரை 0-1 என்று இழந்தது தென் ஆப்பிரிக்கா ஏ.

ராகுல் திராவிட் பயிற்சியின் கீழ் இந்தியா ஏ அணி தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறது. முத்தரப்பு தொடரில் கோப்பையை வென்றதோடு தற்போது டெஸ்ட் போட்டியிலும் தொடரை வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x