Last Updated : 22 Nov, 2019 05:47 PM

 

Published : 22 Nov 2019 05:47 PM
Last Updated : 22 Nov 2019 05:47 PM

மும்முனைத் தாக்குதல்:106 ரன்களில் சுருண்டது வங்கதேசம்; 12 ஆண்டுகளுக்குப்பின் இசாந்த் 5 விக்கெட்: பிங்க் பந்தில் அடி வாங்கிய வீரர்கள்

விக்கெட் வீழ்த்திய மகிழ்சியில் இந்திய அணி வீரர்கள் : படம் உதவி ட்வி்ட்டர்

கொல்கத்தா

இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகிய மும்மூர்த்திகளின் வேகப்பந்துவீச்சு கூட்டணியைச் சமாளிக்க முடியாமல் கொல்கத்தாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களில் சுருண்டது.

வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேரும் சேர்ந்து 10விக்கெட்டுகளை பிரித்துக்கொண்டனர். சுழற்பந்து வீச்சுக்கே வேலையில்லை.

வங்கதேச அணியில் 4 வீரர்கள் டக்அவுட்டிலும், 5 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். அணியில் அதிகபட்சமாக சாத்மான் இஸ்லாம் 29 ரன்கள் சேர்த்தார். 3-வது அதிகபட்சமாக இந்திய அணி அளித்த உதிரிகள் 14 ரன்களாகும்.

முதல்முறையாக பிங்க் பந்தை எதிர்கொண்ட வங்கதேச வீரர்கள் பந்தின் வேகத்தைக் கணிக்க முடியாமல் விளையாடி ஏகத்துக்கும் உடம்பிலும், தலையிலும், தோளிலும் அடிவாங்கியதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

வங்கதேச வீரர்கள் வாங்கிய அடியை இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும் போது வாங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அனுபவமில்லாத பிங்க் பந்து, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளம் என இரு அணி வீரர்களும் பேட்டிங் செய்ய மிகவும் சிரமப்படுவார்கள்.

ஆக்ரோஷமாகப் பந்துவீசிய இசாந்த் சர்மா 12 ஆண்டுகளுக்குப் பின் உள்நாட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன் கடந்த 2007-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இசாந்த் சர்மா வீழ்த்தி இருந்தார். அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பின் இப்போது உள்நாட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அனுபவமற்ற வங்கதேச வீரர்களை பிங்க் பந்தில் விளையாட வைத்து அவர்கள் பந்தில் அடிவாங்கியது ஒருவிதத்தில் பாவமாக இருந்தது. இசாந்த் சர்மா வீசிய பந்தில் ஹெல்மெட்டில் பந்து பட்டு லிட்டன் தாஸ் கன்கஸன் முறையில் வெளியேறினார். அவருக்குப் பதிலாக மெஹதி ஹசன் உள்ளே வந்தார்.அதுமட்டுமல்லாமல் முகமது ஷமி பந்துவீச்சில் நயிம் ஹசன் இருமுறை ஹெல்மெட்டில் அடிவாங்கினார்.

ஆவேசமாகப் பந்து வீசிய இசாந்த் சர்மா 12 ஓவர்கள் வீசி 4 மெய்டன்கள் எடுத்து 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 7 ஓவர்கள் 2 மெய்டன்கள் எடுத்து 29 ரன்கள்விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 10.3 ஓவர்கள் வீசிய 2 மெய்டன்கள் எடுத்து 36 ரன்கள் கொடுத்து 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்கியது. பிங்க் பந்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மோமினுள் ஹக் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்

ஆடுகளத்தில் இருந்த புற்களைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் துல்லியத்தன்மையுடனும், பவுன்ஸர்களையும் வீசி வங்கதேச பேட்ஸ்மேன்களை உருட்டி எடுத்தனர்.

சாத்மான் இஸ்லாம், இம்ருல் கைஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கத்தில் இருந்த இசாந்த் சர்மா, யாதவ் பந்துவீச்சை சமாளிக்கத் திணறினர். இசாந்த் சர்மா வீசிய 7-வது ஓவரில் காவல்காப்பில் வாங்கி இம்ருல் கைஸ் 4 ரன்னில் வெளியேறினார்

அடுத்து கேப்டன் மோமினுள் ஹக் களமிறங்கி சாத்மானுடன் சேர்ந்தார். உமேஷ் யாதவ்வீசிய 11-வது ஓவரில் மோமினுள் ஹக் தட்டிவிட 2-வது ஸ்லிப்பில் இருந்த ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மிதுன் இருபந்துகளைச் சந்தித்தநிலையில் உமேஷ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்

அதன்பின் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் அனல் பறக்க வங்கதேச பேட்ஸ்மேன்கள் களத்துக்கு வருவதும், பெவிலியன் திரும்புவதும் என ராணுவத்தில் வருவதுபோன்று மார்ச்பாஸ்ட் செய்தார்கள்.

ஷமி வீசிய 12-வது ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் டக்அவுட்டில் போல்டாகினார். இசாந்த் சர்மா வீசிய 15-வது ஓவரில் சாத்மான் இஸ்லாம் 29 ரன்னில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இசாந்த் சர்மா வீசிய 20வது ஓவரில் மகமதுல்லா பேட்டில் பட்ட பந்து முதல் ஸ்லிப்பில்நின்றிருந்த கோலிக்கு முன் சென்றது, ஆனால், அருமையாக டைவ் செய்து சாஹா கேட்ச் பிடித்தார். மகமதுல்லா 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் நயிம் ஹசன் 19, இபாதத் ஹூசைன் ஒரு ரன், மெஹதி ஹசன் 8, அபு ஜயத் டக்அவுட் என கடைநிலை வீரர்கள் விரைவாக வெளியேறினர். 30.3 ஓவர்களில் 106 ரன்களில் வங்கதேசம் ஆட்டமிழந்தது. இதில் உதிரிகள் 14 ரன்களை சேர்க்காமல் இருந்திருந்தால், வங்கதேசம் 92 ரன்கள் என்ற மோசமானநிலைக்குச் சென்றிருக்கும். கடைசி 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வங்கதேச அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x