Published : 20 Nov 2019 11:24 am

Updated : 20 Nov 2019 11:24 am

 

Published : 20 Nov 2019 11:24 AM
Last Updated : 20 Nov 2019 11:24 AM

நியூஸி.யுடன் முதல் டெஸ்டில் நாளை மோதல்: பதிலடி முனைப்பில் இங்கிலாந்து

england-test-match

நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுங்கனுயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரலை செய்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் வென்றது. இதில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானித்த கடைசி ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் டையில் முடிவடைந்தது. தொடர்ந்து சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வெற்றிபெற்று கோப்பையை வென்றது.

இந்த டி 20 ஆட்டமானது கடந்தஜூலை மாதம் நடைபெற்ற 50 ஓவர்உலகக் கோப்பை தொடரின் இறுதிஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதியதை நினைவு படுத்தியது. டி 20 தொடரை தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

இதன் முதல் டெஸ்ட் மவுண்ட் மவுங்கனுயி நகரில் உள்ள பேஓவல் மைதானத்தில் நாளை (21-ம் தேதி) தொடங்குகிறது. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள நியூஸிலாந்தும், 3-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தும் மோதஉள்ள இந்த டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுநியூஸிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 0-1 என்ற கணக்கில் இழந்தது.

அதிலும் ஆக்லாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல்இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிவெறும் 58 ரன்களுக்கு சுருண்டிருந்தது. டிரென்ட் போல்ட், டிம் சவுதிஆகியோர் கூட்டாக வீசிய 20.4 ஓவர்களில் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் சரணடைந்திருந்தது. இதனால் இம்முறை கூடுதல் எச்சரிக்கையுடன் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி செயல்படக்கூடும்.

ஜோ ரூட் கூறும்போது, “சில நேரங்களில் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலான ஆட்டத்தை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று பேட் செய்ய முயற்சிக்க வேண்டும். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 120 ஓவர்கள் வரை பேட் செய்தால் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.

இந்தத் தொடரானது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இடம்பெறவில்லை. இதனால் புதிய பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கிறிஸ் சில்வர்வுட் சில பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும் என கருதப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக அறிமுக வீரரான டொமினிக் சிப்லே,ரோரி பர்ன்ஸுடன் இணைந்துதொடக்க வீரராக களமிறங்கக்கூடும். மேலும் ஜோ ரூட் பேட்டிங் வரிசையில் 4-வது இடத்துக்கு மாற்றப்படக்கூடும்.

கேப்டன் கேன் வில்லியம்சன் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவரது வருகை அணியின் பலத்தை அதிகரிக்கச் செய்யக்கூடும். பேட்டிங்கில் டாம் லேதம், ஜீத் ராவல்,ராஸ் டெய்லர், ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.

குறுகிய வடிவிலான போட்டிகளில் அசத்தி வரும் வேகப்பந்து வீச்சாளரான லூக்கி பெர்குசன் டெஸ்ட் போட்டியில் காலடி எடுத்துவைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷார்ட்-பால் பந்து வீச்சுஸ்பெஷலிஸ்டான நெய்ல் வாக்னரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்க ஆயத்தமாகி உள்ளார். இவர்களுடன் டிரென்ட் போல்ட், டிம் சவுதிகூட்டணியும் அசத்த காத்திருக்கிறது.

பே ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுவது இதுதான் முதல்முறை. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் குறுகிய வடிவிலான போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. கடற்கரை ஓரமாக அமைந்துள்ள இந்த மைதானம் சீரான வேகம், பவுன்ஸ் பந்து வீச்சுக்கு நன்குஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அணிகள் விவரம்

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லேதம், ஜீத் ராவல், ராஸ் டெய்லர், காலின் டி கிராண்ட் ஹோம், ஹென்றி நிக்கோல்ஸ், டோட் ஆஷ்லே, டாம் பிளன்டெல், மேட் ஹன்றி, மிட்செல் சாண்ட்னர், டிம் சவுதி, டிரென்ட் போல்ட், வாட்லிங், நெய்ல் வாக்னர், லூக்கி பெர்குசன்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), ஜோ டென்லி, டொமினிக் சிப்லே, ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சேம்கரண், ஜேக் லீச், மேத்யூ பார்கின்சன், ஜாக் கிராலி, சாகிப் மஹ்மூத், ஒல்லி போப், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராடு.- ஏஎப்பி

நியூஸிலாந்து டெஸ்ட் போட்டிபதிலடி முனைப்பில் இங்கிலாந்துகேன் வில்லியம்சன்ஜோ ரூட்ராஸ் டெய்லர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author