Published : 14 Nov 2019 08:12 PM
Last Updated : 14 Nov 2019 08:12 PM
இந்திய ஒருநாள் மற்றும் டி20 தொடக்க வீரர் ஷிகர் தவண் தன் முதல் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் ஸ்கோரரைத் தொந்தரவு செய்யாமல் டக் அவுட் ஆகி வெளியேற, டெல்லி அணி ஜம்மு காஷ்மீரிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது.
டெல்லி அணிக்காக ஆடிய ஷிகர் தவண், 9 பந்துகள் ஆடி ரன் எதுவும் எடுக்க முடியாமல் தட்டுத் தடுமாறி கடைசியில் ராம் தயால் என்ற பவுலரிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.
இந்திய அணியிலும் தொடர்ந்து சொதப்பி வந்தாலும் கோலி, ரோஹித் லாபி இவரது இடத்தை விடாமல் தக்க வைத்து வருகிறது, சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணியில் நிதிஷ் ராணா 30 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 55 ரன்கள் விளாச டெல்லி அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.
இலக்கை விரட்டிய ஜம்மு காஷ்மீர் அணி 15.5 ஓவர்களில் 166 ரன்கள் இலக்கை விரட்டி தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஷுபம் காஜுரியா என்ற வீரர் 22 பந்துகளில் 49 ரன்களை வெளுத்துக் கட்டினார். ஜதின் வாதாவன் 48 நாட் அவுட். ஆனால் மகா காட்டடி அடித்த வீரர் மன்சூர் தார், இவர் 24 பந்துகளில் 58 ரன்களை விளாசினார்.
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீர் பிரமாதமான வெற்றியை ஈட்டி டெல்லிக்கு அதிர்ச்சியளித்தது.
மன்சூர் தார் 2018ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் அநியாயமாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.