Published : 12 Nov 2019 08:40 PM
Last Updated : 12 Nov 2019 08:40 PM
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசைகளில் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி மற்றும் நம்பர் 1 பவுலர் பும்ரா ஆகியோர் அசைக்க முடியாத இடத்தில் உள்ளனர்.
பேட்டிங்கில் விராட் கோலி 895 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பவுலிங்கில் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். ஒருநாள் தரவரிசையில் பேட்டிங்கில் கோலிக்கு அடுத்த படியாக 834 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இருக்கிறார்.
ரோஹித் சர்மா தற்போது அனைத்து வடிவங்களிலும் களைகட்டும் ஒரு பேட்ஸ்மெனாகி வருகிறார். பவுலிங் தரவரிசையில் பும்ராவுக்கு அடுத்ததாக 2ம் இடத்தில் 740 புள்ளிகளுடன் நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இருக்கிறார்.
டாப் 10 ஆல்ரவுண்டர்களில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 246 புள்ளிகளுடன் 10ம் இடத்தில் உள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் அசைக்க முடியா முதலிடத்தில் 319 புள்ளிகளுடன் நீடிக்கிறார். 2ம் இடத்தில் ஆப்கான் ஆல்ரவுண்டர் முகமது நபி இருக்கிறார்.
இந்திய அணி அடுத்ததாக மே.இ.தீவுகளுடன் ஒருநாள் தொடரில் ஆடுகிறது, 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் சென்னையில் டிசம்பர் 15ம் தேதி தொடங்குகிறது.