Published : 12 Nov 2019 07:27 PM
Last Updated : 14 Nov 2019 02:07 PM
கொல்கத்தாவில் முதல் முறையாக இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிறப்பந்தில் ஆடவிருப்பதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே அதன் சவால்கள் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் திராவிட் முன்னிலையில் ரஹானே, புஜாரா, மாயங்க் அகர்வால், மொகமட் ஷமி, ஜடேஜா ஆகியோர் 2 செஷன்கள் பயிற்சி செய்தனர்.
“பகலிலும், இரவிலும் இரண்டு செஷன்கள் பிங்க் நிறப்பந்தில் பயிற்சி மேற்கொண்டோம், மிகவும் உற்சாகமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை முதல் அனுபவம், நிச்சயம் இது வேறு விஷயம்தான். சிகப்புப் பந்தை விட இந்தப் பந்து கொஞ்சம் கூடுதல் ஸ்விங் ஆகிறது, உடலுக்கு வெளியே மட்டையைக் கொண்டு செல்லாமல் உடலுக்கு நெருக்கமாக மட்டையை வைத்து ஆட வேண்டும், அதே போல் கொஞ்சம் பந்து வந்த பிறகு தாமதமாக ஆட வேண்டும். ராகுல் திராவிடின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தோம்.
துலீப் ட்ராபியில் அவர்கள் குக்காபரா பந்தில் ஆடினர், அது வேறு ரகம் இந்த எஸ்.ஜி. பந்து வேறு ஒரு ரகம். சிகப்புப் பந்தை விட பிங்க் பந்தில் பளபளப்பு வித்தியாசமாக உள்ளது. நான் கேள்விப்பட்ட வரை குக்காபரா பந்து பேட்ஸ்மென்களுக்கு கொஞ்சம் எளிதாக இருக்கும் என்று. ஆனால் நாங்கள் ஆடிய எஸ்.ஜி. பந்து வேகப்பந்து வீச்சாளார்களுக்குக் கொஞ்சம் கூடுதல் சாதகமாக உள்ளது. ஸ்பின்னர்களுக்கு இந்தப் பந்து கொஞ்சம் கடினம்தான்.
எனவே மனரீதியாக பிங்க் நிறப்பந்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொண்டு விட்டால் நல்லபடியாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் ரஹானே.