Published : 12 Nov 2019 06:14 PM
Last Updated : 12 Nov 2019 06:14 PM
டி20-யில் பாகிஸ்தானுக்கு எதிராக 51 பந்துகளில் 80 ரன்கள் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் நியூசவுத்வேல்ஸ் அணிக்காக தன் 42வது முதல்தர கிரிக்கெட் சதத்தை 290 பந்துகளில் அடித்திருப்பது அவரது மிக மெதுவான சதமாகும்.
சிட்னி மைதானத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஷெஃபீல்ட் ஷீடல்ட் ஆட்டத்தில் 290 பந்துகளில் 100 ரன்களை எட்டினார், ஏற்கெனவே 2017-18 ஆஷஸ் தொடரில் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 261 பந்துகளில் சதம் எடுத்தது இவரது முந்தைய மெதுவான சதமாகும்.
ஸ்மித் இதுபற்றி கூறும்போது, “டி20யில் ஆடிய பிறகே சிகப்புப் பந்து கிரிக்கெட்டுக்குத் திரும்புவது பற்றியதாகும் இது, தற்போது சரியான முறையில் ஆடியதாகக் கருதுகிறேன். எனக்குப் பிடித்தமானதை விடவும் மந்தமாகவே ஆடினேன். பிட்சும் மந்தமான பிட்ச், ஸ்லிப் பீல்டர்களே இல்லை, பீல்டர்கள் சுற்றி நின்றிருந்தனர். பிட்ச் மிகவும் மென்மையாக இருந்த்து.
ஆனால் இப்படித்தான் நான் சிறப்பாக ஆடுவதாக கருதுகிறேன். பொறுமையாக பந்துக்குரிய மரியாதையை அளித்து ஆடினேன். அவர்கள் நல்ல பந்துகளை வீசினார்கள், என்னை சுதந்திரமாக ரன்கள் அடிக்க விடவில்லை.
நான் அங்கு நின்று ரன்களை உதிரி உதிரியாகச் சேர்த்தேன். 450 ரன்கள் எடுத்துள்ளோம், இது நல்ல ஸ்கோர் என்றே கருதுகிறேன்” என்றார். ஸ்மித் 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.