Published : 12 Nov 2019 05:01 PM
Last Updated : 12 Nov 2019 05:01 PM
வங்கதேச அணிக்கு எதிராக நாக்பூரில் ஞாயிறன்று கடைசி டி20 போட்டியில் ஹாட்ரிக் சாதனை புரிந்ததோடு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை புரிந்த தீபக் சாஹர் 3 நாட்களில் இன்னொரு ஹாட்ரிக் சாதனை புரிந்து அசத்தியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செவ்வாயன்று விதர்பா அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி ஆடும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் ஆட்டத்தில் விதர்பா அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றி இன்னொரு ஹாட்ரிக் சாதனையை 3 நாட்களில் நிகழ்த்தி அசத்தினார் தீபக் சாஹர்.
இந்த ஹாட்ரிக் சாதனையில் இன்னும் ஒரு படிமேலே போய் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் தீபக் சாஹர். 13வது ஓவரின் முதல் பந்தில் ஒரு விக்கெட் பிறகு கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட் என்று பின்னி எடுக்க விதர்பா அணி 13 ஓவர்களில் 99 ரன்களுக்குச் சுருண்டது.
தீபக் சாஹர் 3 ஒவர் 18 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்று அசத்தினார்.
13வது ஓவரின் முதல் பந்தில் ருஷப் ராத்தோட் என்பவரை தன் உறவினர் ராகுல் சாஹரின் கேட்சில் வீழ்த்திய தீபக் பிறகு 4,5,6 ஆகிய பந்துகளில் தர்ஷன் நல்காண்டே, ஸ்ரீகாந்த் வாக், அக்ஷய் வாட்கர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.
தொடர்ந்து ஆடிவரும் ராஜஸ்தான் அணி 4 ஓவர்களில் 58/0 என்று அதிரடி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.