Published : 11 Nov 2019 02:33 PM
Last Updated : 11 Nov 2019 02:33 PM

ஆட்டம் பற்றிய நுண் அறிதிறன் இல்லை: தோல்வி குறித்து வங்கதேச டி20 கேப்டன் மஹமுதுல்லா 

நாக்பூர் டி20 போட்டியில் தீபக் சாஹரின் வரலாற்று ஹாட்ரிக் சாதனையில் இந்திய அணி வங்கதேசத்தை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

வங்கதேச அணி மொகமட் நயீமின் அதியற்புத 81 ரன்களினால் 110/2 என்று 13 ஓவர்கள் முடிவில் வலுவாக இருந்தது. ஆனால் கடைசி 8 விக்கெட்டுகளை 6.2 ஓவர்களில் 34 ரன்களுக்கு இழந்து வெற்றியை இந்திய அணிக்குத் தாரை வார்த்தது. உலக சாதனையான 7 ரன்களுக்கு 6 விக்கெட்டைக் கைப்பற்றிய தீபக் சாஹர் டி20 சர்வதேச போட்டியில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் இந்திய பவுலர் ஆனார் சாஹர்.

இந்நிலையில் வங்கதேச கேப்டன் மஹமுதுல்லா கூறியதாவது:

30 பந்துகளில் 50 ரன்கள் தேவை என்ற நிலையில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அவசரம் அவசரமாக விக்கெட்டுகளை இழந்தோம். டி20 கிரிக்கெட்டில் உத்வேகத்தை இழந்து விட்டால் மீட்பது கடினம். நான் ஏற்கெனவே கூறியது போல் நாங்கள் வெற்றிக்கு நெருக்கமாகவே வந்தோம். 6-7 பந்துகளில் 3-4 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இப்படிப்பட்ட தவறுகளை திரும்பத் திரும்பச் செய்ய முடியாது.

உள்ளபடியே கூறவேண்டுமெனில் டி20 கிரிக்கெட்டில் நாங்கள் இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டியுள்ளது. சாதுரியமான, திறமையான ஹிட்டர்களை நம்பியிருக்கும் அணியாகும் எங்களுடைய அணி. பெரிய ஹிட்டர்கள் எங்களிடம் இல்லை.

எனவே ஆட்டம் பற்றிய நுண் அறிதிறன் சீரான முறையில் இருந்தால், புத்தி சாதுரியம் இருந்தால் இந்த வடிவத்தில் நாங்கள் முன்னேற்றம் காண முடியும், என்றார்.

இந்திய அணி 2-1 என்று வெற்றி, வங்கதேச அணியின் சார்பாகவும் முடிவு 2-1 என்று அமைய வாய்ப்பிருந்தது, ஆனால் அந்த அணியின் அனுபவமின்மை கடைசியில் தீபக் சாஹரிடம் மடிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x