Published : 03 Nov 2019 07:19 PM
Last Updated : 03 Nov 2019 07:19 PM

காற்று மாசு பிரச்சினை:  இந்தியா-வங்கதேசம் முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டி;  திட்டமிட்டபடி தொடக்கம்

புதுடெல்லி
டெல்லியில் காற்று மாசு பிரச்சினையால் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில், இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டி20 போட்டி திட்டமிட்டபடி தொடங்கியது.

டெல்லியில் கடந்த சில நாட்களாகக் காற்று, புகை மாசு உச்சக் கட்டத்தையும் தாண்டி இருக்கிறது. காற்றுமாசுக் குறியீடு இன்று 600 புள்ளிக்களுக்கு மேல் சென்று மக்கள் சுவாசிக்கத் தகுதியற்ற நிலையை எட்டியுள்ளது. இதனால், வரும் 5-ம் தேதிவரை டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையும், எந்தவிதமான கட்டிடப் பணிகளும் செய்வதற்குச் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டி20 போட்டியை இன்று நடத்துவது சந்தேகத்துக்குரிய விஷயமாக மாறியது. வங்கதேச, இந்திய அணி வீரர்களும் முகத்தில் சுவாசக் காப்பு அணிந்துதான் பயிற்சியில் ஈடுபட்டார்கள். கடந்த 3 நாட்களாக புகை மாசு குறையாமல் இருந்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவைச் சந்தித்து நேற்று முன்தினம் பேசினார். அப்போது, டெல்லியின் காற்று மாசு, புகைமூட்டம் ஆகியவற்றுக்கிடையே விளையாட முடியுமா என்று இருவரும் ஆலோசித்துள்ளனர். அப்போது எந்தவிதமான சிக்கலும் இல்லை விளையாடிவிடுவோம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கடந்த இரு நாட்கள் இருந்த சூழலைக் காட்டிலும் இன்று டெல்லி காற்று மாசு அதிகமாகவும், புகைமூட்டமும் அதிகமாக இருப்பதால், போட்டியின் போது பல்வேறு சிக்கல்கள் எழக்கூடும் என்று ஆடுகள வடிமைக்கப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.
இதனால் திட்டமிட்டபடி போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் போட்டி நடத்துவதில் எந்தவிதமான இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. திட்டமிட்டபடி போட்டி நடக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்தது.
இந்தநிலையில் இந்தியா-வங்கதேசம் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம் (பெரோஸ் ஷா கோட்லா) மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துகிறார். ஹர்திக் பாண்டியா யத்தால் ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக இளம் வீரர் சிவம் துபே அறிமுகமாகியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x