Last Updated : 01 Nov, 2019 12:10 PM

 

Published : 01 Nov 2019 12:10 PM
Last Updated : 01 Nov 2019 12:10 PM

டி20 போட்டி: வின்ஸ் காட்டடி, பந்துவீச்சில் கரண் சகோதரர்கள் நெருக்கடி: நியூஸியை வீழ்த்திய இங்கிலாந்து

கிறிஸ்ட்சர்ச்

ஜேம்ஸ் வின்ஸின் காட்டடி பேட்டிங், டாம் கரண், சாம் கரண், ஜ சகோதரர்கள், ஜோர்டனானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்த முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

உலகக்கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றபின், இங்கிலாந்து அணி எந்தவிதமான ஒருநாள், டி20 போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து அதன்பின்கலந்து கொண்ட முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆடிய வின்ஸ் 39 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து(7 பவுண்டரி, 2சிக்ஸர்) ஆட்டமிழந்தார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். பேர்ஸ்டோ 35 ரன்களிலும், மோர்கன் 34 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமலும் இருந்தனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுதான் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று கூற முடியும். குறிப்பாக சாம் கரண், டாம் கரண்,ஜோர்டன் ஆகியோர் பவர்ப்ளே ஓவரில் நியூஸிலாந்து அணியை ரன்கள் சேர்க்கவிடாமல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நெருக்கடி அளித்தார்கள்.

மேலும் ஆஷஸ் தொடருக்குப்பின் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இந்த தொடரில் இங்கிலாந்து விளையாடிவரும் நிலையில், இந்த வெற்றி இளம் வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமாக அமையும்.

பேட்டிங்கில் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் பேர்ஸ்டே, மலான் விரைவாக ஆட்டமிழந்தார்கள். அந்த நேரத்தில் ஜேம்ஸ் வின்ஸின் காட்டடி ஆட்டம் நியூஸிலாந்து அணியினரை நிலைகுலையச் செய்துவிட்டது. கட்டுக்கோப்பான பந்துவீச்சும், வின்ஸின் அதிரடி ஆட்டமும் இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை வழக்கமான அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் இடுப்பு வலிகாரணமாக தொடரில் இடம் பெறவில்லை.இது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனமாகும்

டிம் சவுதி தலைமையில் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. எதிர்பார்த்த அளவுக்கு நியூஸிலாந்து அணியில் வலிமையான பேட்டிங் வரிசை இல்லை. கப்தில், மன்ரோ இருவரும் உலகக்கோப்பையில் இருந்து இன்னும் தங்களின் மோசமான பேட்டிங் ஃபார்மில் வெளியே வரவில்லை.

இருப்பினும் தொடர்ந்து இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது ஏனோ எனத் தெரியவில்லை. நடுவரிசையில் டெய்லர், மிட்ஷெல், ஷீபெர்ட் ஆகியோர் நிலைக்காவிட்டால் நியூஸிலாந்து நிலை மோசமாகி இருக்கும்.

கடந்த ஜூலை மாதம் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் மீண்டும் இங்கிலாந்துடன் மோதி நியூஸிலாந்துக்கு மீண்டும் தோல்விதான் கிடைத்துள்ளது.

நியூஸிலாந்து நாட்டுக்கு இங்கிலாந்து அணி பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் இன்று முதலாவது டி20 ஆட்டம் நடந்தது.

இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக அணியைத் தயார்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அதற்காக சாம் கரண், பாட் பிரவுன், லூயிஸ் கிரிகோரி ஆகியோர் அறிமுகமாகினார்கள்.

டாஸ்வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். நியூஸிலாந்து அணியின் கப்தில், மன்ரோ இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

இங்கிலாந்து அணியின் கரண் சகோததரர்கள், ஜோர்டன் ஆகியோரின் பந்துவீச்சால் பவர்ப்ளே ஓவரில் நியூஸிலாந்து அணி ரன் சேர்க்கத் திணறி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

சாம்கரண் வீசிய 3-வது ஓவரில் 2 ரன்னில் கப்தில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ஜோர்டன் வீசிய6-வது ஓவரில் மிட்விக்கெட்டில் நின்றிருந்த மோர்கனிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்னில் மன்ரோ வெளியேறினார்.

இதனால் பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் மட்டுமே சேர்த்தது நியூஸிலாந்து. அடுத்து வந்த கோலின் டி கிராண்ட்ஹோம், ஷீபெர்ட் ஓரளவுக்கு களத்தில் இருந்தனர்.

கிராண்ட்ஹோம் 19 ரன்கள் சேர்த்தபோது ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஷீபெர்ட் 39 ரன்கள் சேர்த்த போது, ஜோர்டன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூஸிலாந்து.

5-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர், மிட்ஷெல் ஜோடி இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனரர்.

ராஸ் டெய்லர் 44 ரன்களில் பிரவுன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மிட்ஷெல் 30 ரன்களிலும், சான்ட்னர் ஒரு ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது.

154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. மலான், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினர். பேர்ஸ்டோ வழக்கம்போல் தனது அதிரடியால் பவுண்டரிகளாக விளாசியதால் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது.

ஆனால், 11 ரன்கள் சேர்த்தநிலையில் சான்ட்னர் பந்துவீச்சில் மலான் சோதியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த வின்ஸ், பேர்ஸ்டோவுடன் சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஸ்கோர் வேகமெடுத்தது.

இவர்களைச் சமாளிக்க நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. பவர்ப்ளே ஓவரில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்தது.

குறிப்பாக வின்ஸ் ஆட்டத்தில் அனல் பறந்தது என்ற கூறலாம். சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 35 ரன்களில் சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் மோர்கன், வின்ஸுடன் சேர்ந்தார். இருவரும் நியூஸிலாந்து பந்துவீச்சை வெளுத்துவாங்கினர். அதிரடியாக பேட் செய்த வின்ஸ் 33 பந்துகளில் தனது டி20 முதலாவது அரைசதத்தை பதிவு செய்தார்.

59 ரன்கள் சேர்த்த வின்ஸ் சான்ட்னர் பந்துவீச்சில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் வந்த பில்லிங்ஸ், மோர்கன் ஜோடி அணியை வெற்றி பெற வைத்தனர். பில்லிங்ஸ் 14 ரன்களுடனும், மோர்கன் 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நியூஸிலாந்து தரப்பில் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x