Published : 19 Oct 2019 04:08 PM
Last Updated : 19 Oct 2019 04:08 PM

வங்கதேசத்துடன் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு?

மும்பை,

நவம்பர் மாதம் நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடமாட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு ஆண்டாக தொடர்ச்சியாக அவர் விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று இந்திய அணி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன

வங்கதேசம் அணி அடுத்தமாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வங்கதேசம் விளையாட உள்ளது. டி20 போட்டிகள் நவம்பர் 3,7,10 தேதிகளிலும், டெஸ்ட் போட்டி 14-ம் தேதி இந்தூரிலும், 22-ம் தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது.

இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இருப்பதால், முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதேசமயம், இந்திய அணி கடந்த ஓர் ஆண்டில் 10 டெஸ்ட் போட்டிகள், 30 ஒருநாள் போட்டிகள், 16 டி20 போட்டிகள் போன்றவற்றில் விளையாடியுள்ளது. இந்த 3 விதமான போட்டிகளிலும் கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

அதாவது 10 டெஸ்ட் போட்டிகள், 28 ஒருநாள் போட்டிகள், 10 டி20 போட்டிகளிலும் விராட் கோலி விளையாடியுள்ளார். நியூயிலாந்துக்கு எதிரான டி20 போட்டி, மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடவில்லை.

இந்திய அணிக்கு விராட் கோலி தொடர்ச்சியான பங்களிப்பு செய்துவருவதால், அவரின் உடல்நிலையை சீராக வைத்திருக்கவும், தனிப்பட்ட ஓய்வு அளிக்கவும் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதனால், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு முழுமையான ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விராட் கோலிக்கு அளிக்கப்படும் போது, வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் அதிகமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும்.

இதன் மூலம் இளம் வீரர்கள் கண்டறியப்பட்டு, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு தயார் செய்ய முடியும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது.

மேலும் அடுத்த ஆண்டு இந்திய அணி நியூஸிலாந்து பயணம் மேற்கொள்கிறது. அப்போது விராட் கோலி முழு உடல்நலத்துடன் இருப்பது அவசியம் என்பதால், அவருக்கு இப்போது ஓய்வு அளிப்பது அவசியம் என்று அணி நிர்வாகம் கருதுகிறது.

அதுமட்டுமல்லாமல் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்ஸன், சிவம் துபே,சுப்மான் கில்,கர்நாடக வீரர் கே.கவுதம் ஆகியோருக்கு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பளித்து சோதித்துப் பார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதலால், வரும் 24-ம் தேதி மும்பையில் நடக்கும் அணித் தேர்வுக் குழுக் கூட்டத்தில் வங்கதேசம் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது.

இதில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் அதற்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்பார் எனத் தெரிகிறது.

மேலும், பிசிசிஐ அமைப்பின் புதியதலைவராக சவுரவ்கங்குலி வரும் 23-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவர் பதவி ஏற்றபின் அணித் தேர்வுக்குழுவிலும் மாற்றங்கள் கொண்டுவருவார் எனத்தெரிகிறது.

இப்போதுள்ள எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுக்வுக்கு பதிலாக திலிப் வெங்சர்க்கார் அல்லது சிவராமகிருஷ்ணன் தலைமையில் புதிய குழு அமைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x