Last Updated : 19 Oct, 2019 11:57 AM

 

Published : 19 Oct 2019 11:57 AM
Last Updated : 19 Oct 2019 11:57 AM

மும்முனைத் தாக்குதல்: எகிறும் ரபாடா பந்துவீச்சு: புஜாரா, கோலி அவுட்; இந்திய அணி திணறல் 

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவை பாராட்டும் சக வீரர் : படம் உதவி ட்விட்டர்

ராஞ்சி,

ராஞ்சியில் நடந்து வரும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ரபாடா, நார்ட்ஜே, லுங்கி இங்கிடி ஆகியோரின் எகிறும் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்கத் திணறி வருகின்றனர்.

ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்திக் கொண்ட ரபாடா, நார்ட்ஜே, லுங்கி இங்கிடி ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை தண்ணிகுடிக்க வைத்தனர். முதல் ஒரு மணிநேரம் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டில் பந்தை தடுப்பதற்கே பெரும் சிரமப்பட்டனர். தென் ஆப்பிரிக்க வேகபந்துவீச்சாளர்களின் உண்மையான வேகம், வேகப்பந்துவீச்சில் இருக்கும் உற்சாகம், அனல் பறக்கும் பந்துவீச்சு இன்று காலையில் வெளிப்பட்டது.

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னனியில் இருக்கிறது.

தொடர்ந்து டாஸ் வெல்ல முடியாமல் ராசியின்றி தவித்துவரும் தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசி டாஸ் ஜெயிக்க பவுமாவை அனுப்பினார். ஆனால், இந்த முறையும் டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆனால், ராஞ்சி ஆடுகளம் புனே, விசாகப்பட்டினம் ஆடுகளங்களைப் போல் சொத்தையாகவும், தட்டையாகவும் இருக்கும் என நம்பி விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால், அனைத்து தலைகீழாக நடந்தது.

ஏனென்றால், ராஞ்சி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமில்லாத ஆடுகளம், பந்துகள் நன்றாக எகிறும். ராஞ்சி ஆடுகளத்தில் ஏராளமான பிளவுகளும், புற்களும் காணப்படுவதால் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். காலை நேரத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக ஸ்விங் செய்யும் பட்சத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்த முடியும் என்று தெரிவித்திருந்தோம். அதை சரியாகப் பயன்படுத்தினார்கள்.

பேட்ஸ்மேன்களுக்கு வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் எதிர்கொண்டு பேட் செய்வது கடினமாகத்தான் இருக்கும். கடந்த 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வந்தபோது இருந்த ஆடுகளம் போல் இருப்பதால், பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்ப்பது கடினமாக இருக்கும். அதேசமயம், இரு நாட்களுக்குப்பின் பந்துகள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார்போல் நன்கு டர்ன் ஆகும். ஒட்டுமொத்தத்தில் பேட்டிங்கிற்கு சாதகமில்லாத மைதானமாகவே அமைக்கப்பட்டுள்ளது.

மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்திய ரபாடா தனது வழக்கமான வேகப்பந்துவீச்சில் பந்தை பேட்ஸ்மேனுக்கு மார்புக்கு ஏற்றி மிரட்டல் விடுத்தார். ரபாடாவுக்கு துணையாக நார்ட்ஜே, லுங்கி இங்கிடி ஆகிய 3 பேரும் சேர்ந்து மும்முனைத் தாக்குதல் தொடுத்ததால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

ரபாடா வீசிய 5-வது ஓவரில் மயங்க் அகர்வால் 10 ரன்கள் சேர்த்த நிலையில், 3-வது ஸ்லிப்பில் நின்றிருந்த எல்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து புஜாரா களமிறங்கி ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனதால், கனித்து ஆடுவதில் இருவருக்கும் சிரமம் இருந்தது. ரபாடா வீசிய 9-வது ஓவரில் கால்காப்பில் வாங்கிய புஜாரா டக்அவுட்டில் வெளியேறினார்.
இந்திய அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைஇழந்து திணறியது. ஆடுகளத்தின் பிளவுகளையும், வறண்ட தன்மையையும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்தி, பந்தை எகிறவிட்டனர்.

அடுத்துவந்த கோலி, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த கோலி, இந்த ஆடுகளத்தில் பந்துகள் வந்தவேகத்தைப் பார்த்து சமாளித்து ஆட சிரமப்பட்டாலும் இரு பவுண்டரிகள் அடித்தார்.

ஆனால் களத்தில் நீண்டநேரம் நிலைக்காத கோலி 12 ரன்கள் சேர்த்த நிலையில் நார்ட்ஜேவின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதனால் 16 ஓவர்களில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது.
அடுத்துவந்த ரஹானே, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து விளையாடி வருகின்றனர். 20-து ஓவரில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது.

மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 38 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x