Last Updated : 06 Oct, 2019 03:35 PM

 

Published : 06 Oct 2019 03:35 PM
Last Updated : 06 Oct 2019 03:35 PM

முதல் டெஸ்ட்: ஷமி, ஜடேஜா பந்துவீச்சில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா;மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

விசாகப்பட்டினம்

முகமது ஷமியின் துல்லியமான பந்துவீச்சு, ரவிந்திர ஜடேஜாவின் திணறவிடும் சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

கடைசி நாளில் மிகச்சிறப்பாகப் பந்துவீசிய ஷமி 10 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள் எடுத்து 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இருவரும் சேர்ந்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் ஒட்டுமொத்த சரிவுக்கு காரணமாக அமைந்தனர்.

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அதிலும் நடுவரிசை வீரர்களான டூப்பிளசிஸ், டீகாக், பவுமா ஆகிய 3 வீரர்கள் விக்கெட்டையும் ஷமி எடுத்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதேபோல, எல்கர், மார்க்ரம் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஜடேஜாவும் உதவினார்.

இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது என்று சொல்வதற்கு பதிலாக ஆடுகளம் மோசமாக இருந்தது என்றுதான் கூற முடியும். 4 நாட்கள் வரை பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைத்த மைதானம். கடைசிநாளான இன்று பந்து பேட்ஸ்மேனை நோக்கி சென்றதே தவிர பந்து பவுன்ஸ் ஆகவில்லை.

பவுன்ஸ் ஆகா ஆடுகளத்தில் ஒருபேட்ஸ்மன் பந்தை எவ்வாறு கணித்து ஆட முடியும். கனுக்காலுக்கு கீழே பந்து எழும்பாமல் சென்றால் பேட்ஸ்மேன்கள் போல்டாவதும், கால்காப்பில் ஆட்டமிழப்பதும் இயல்பாக நடக்கும் விஷயம்தான்.

ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி என்பதை மனதில் வைத்து ஆடுகளத்தை இன்னும் தரமாக அமைத்திருக்கலாம். 5 நாட்களும் ஆடுகளத்தை எந்த அணிக்கும் சார்பில்லாமல் வைத்திருப்பதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழகாகும். ஐசிசி கவனத்தின் கீழ் வரும் இதுபோன்ற போட்டிகளில் உள்ளூரில் விளையாடும் அணிகளுக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைப்பது ஆடுகளத்தை மட்டுமல்ல, ஐசிசியின் நடுநிலையையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

இந்திய பந்துவீச்சாளர்களின் திறமையை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், ஆடுகளம் இன்னும் தரமாக இருந்திருந்தால் போட்டி இன்னும் கடுமையாகவும், பரபரப்பாகவும், ஏன், போட்டி டிராவில் முடிவதற்கு கூட வாய்ப்பு இருக்கும்.

ஆடுகளத்தின் தன்மை குறித்து முகமது ஷமி கூட தனது பேட்டியில், " பந்துவீசுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது, ஆடுகளம் மெதுவாகவும், பந்துகள் எழும்பாமல் சென்றது வேறுவழியில்லாமல் பேட்ஸ்மேனை நோக்கியே வீசினேன்" எனத் தெரிவித்துள்ளதே ஆடுகளத்தின் தன்மைக்கு சாட்சி.

மற்றவகையில் இந்த வெற்றியால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 40 புள்ளிகளைப் பெற்று, ஒட்டுமொத்தமாக 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவின் சதம், மயங்க் அகர்வாலின் இரட்டை சதம் ஆகியவற்றால் 7 விக்கெட் இழப்புக்கு 507 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியின் எல்கர், டீகாக் பதிலடியாக சதம் அடித்து முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2-வது இன்னிங்ஸில் 71 ரன்கள் முன்னிலையுடன் ஆடத் தொடங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் முத்தாய்ப்பான சதம்(127), புஜாராவின் (81) ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஏற்கனவே 71 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததையடுத்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய 4-வது ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் சேர்த்திருந்தது.

மார்க்ரம் 3 ரன்களுடன், புருன் 5 ரன்களுடன் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கி சிறிதுநேரத்திலே அஸ்வின் பந்துவீச்சில் புருன் 10 ரன்கள் சேர்த்த நிலையில் போல்டாகி வெளியேறினார்.

இந்த விக்கெட்டை வீழ்த்தியபோது, டெஸ்ட் அரங்கில் 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன்சாதனையை அஸ்வின் சமன்செய்தார்.

அடுத்துவந்த பவுமா வந்தவேகத்தில் ஷமிபந்தவீச்சில் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டுபிளசிஸ் சிறிது நேரம் மட்டுமே களத்தில் இருந்தார். ஷமியின் பந்துகள் மிகவும் துல்லியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வந்ததால் அவரின் பந்தை சமாளித்து ஆட சிரமப்பட்டனர்.

டுபிளசிஸ் 13 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த டீகாக் இந்த முறை டக்அவுட்டில் ஷமிபந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

காலையில் 11 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி மதிய உணவு இடைவேளைக்குச் செல்லும் போது, 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்ததை என்ன சொல்ல? 52 ரன்களில் இருந்து 70ரன்களுக்குள் அதாவது 18 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்க அணி இழந்தது.

8-வது விக்கெட்டுக்கு டேன் பியெட், முத்துசாமி இணைந்தனர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு பேட் செய்தனர். இருவரின் விக்கெட்டையும் பிரிக்க பலமுறை பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலனில்லை.

சிறப்பாகஆடிய டேன் பியெட் அரைசதம் அடித்து 56 ரன்களில் ஷமி வேகத்தில் போல்டானார். இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த ரபாடா, முத்துசாமி ஓரளவுக்கு நிலைத்தனர். ரபாடா அவ்வப்போது சில பவுண்டரிகளையும், சிக்ஸரும் அடித்தார்.

நீண்டநேரம் நிலைக்காத ரபாடா 18 ரன்கள் சேர்த்த நிலையில் சாஹாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். முத்துசாமி 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முடிவில் 63.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்து 203 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய தரப்பில் ஷமி 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்

போத்திராஜ்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x