Published : 01 Oct 2019 06:04 PM
Last Updated : 01 Oct 2019 06:04 PM

ரிஷப் பந்த் நீக்கத்துக்கு அவர் பேட்டிங் சொதப்பல் மட்டும்தான் காரணமா?

டெஸ்ட் போட்டிகளில் அயல்நாட்டில் பயங்கரமான எதிரணி பந்து வீச்சுக்கு எதிராக இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2 முக்கியச் சதங்களை எடுத்த ரிஷப் பந்த் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அணியில் இல்லை. அவருக்குப் பதிலாக விருத்திமான் சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம், பொதுவாக வெள்ளைப்பந்து கிரிக்கெட் நெருக்கடிகள் வேறு, டெஸ்ட் போட்டிகளுக்கான நெருக்கடி வேறு, இப்படியிருக்கும் போது குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் ரிஷப் பந்தின் மோசமான ஷாட் தேர்வு சொதப்பல்கள் அவரை டெஸ்ட் அணியிலிருந்து நீக்குவதற்குக் காரணமாக இருக்கும் என்பதை நம்புவதற்கு சற்றுக் கடினமாகவே உள்ளது.

அதுவும் 22 மாதங்களுக்குப் பிறகு சஹாவை ‘உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்’ என்று கோலி புகழாரம் சூட்டி அணியில் சேர்த்திருப்பது சரியாகத் தொனிக்கவில்லை, யாரைத் திருப்தி செய்ய அல்லது எதற்கு முன்னோட்டமாக பந்த் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

மீண்டும் ஒரு இளம் வீரரின் தன்னம்பிக்கையை உடைத்து அவரது திறமைகளை மழுங்கச்செய்யும் ஒரு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை விராட் கோலி அண்ட் கம்பெனி எடுத்துள்ளனர்.

ஒரு காரணம் அது விராட் கோலி வெளிப்படையாகக் கூறாத காரணம் என்றாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம். அதாவது சுத்த சுயம்பிரகாச விக்கெட் கீப்பர் சஹா என்கிறார் விராட் கோலி.

ஆகவே ரிஷப் பந்த்தின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் பார்ம் அவரது டெஸ்ட் இடத்தைப் பறிக்கவில்லை என்பது விராட் கோலியின் நியாயப்பாடு உணர்த்தும் சூசகச் செய்தியாகும்.

இந்தியப் பிட்ச்கள் முதல் நாளிலிருந்தே குழிப்பிட்ச் ஆகி பந்துகள் தாறுமாறாகத் திரும்பும் போது அஸ்வின், ஜடேஜா போன்ற இந்திய பிட்ச் மாஸ்டர்களை ரிஷப் பந்த்தினால் சரிவர கீப் செய்ய முடியாது என்ற காரணத்தினால் சஹா தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது, ஆனால் இதையும் விராட் கோலி வெளிப்படையாகக் கூறவில்லை.

மோசமான பேட்டிங் பார்ம், அவர் மீதான விமர்சனங்களின் அழுத்தத்தில் அவர் விக்கெட் கீப்பிங் பாதிக்கப்படலாம் என்று பிசிசிஐ தரப்பில் ஒருவர் கூறியதாக இந்தியா டிவி செய்தி கூறியுள்ளது.

மேலும் சஹாவுக்கு வயது 35, ரிஷப் பந்த்திற்கு வயது 21. இதுதான் ரிஷப் பந்த்தை அவரது தவறுகளிலிருந்து மீட்டு ஒரு பெரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக உருவாக்கச் சரியான தருணமாகும், இந்நிலையில் ஒரு இளம் வீரர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை பெரிய அளவில் தோல்வியடையாத நிலையிலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெரிய வெற்றிகளைக் குவித்து வரும் நிலையிலும் இளம் விக்கெட் கீப்பரை ஊக்குவித்து அவரை வளர்ச்சியடையச் செய்வதுதான் ஒரு சிறந்த அணியின் வழிமுறையாக இருக்க வேண்டும்.

ஆனால் 35 வயது சஹாவை மீண்டும் அழைத்திருப்பது ஒரு பின் நோக்கிய பயணமே. சஹா வெற்றியடையலாம் அல்லது தோல்வியடையலாம் அதுவல்ல விஷயம், யார் இங்கு ‘பெட்டர்’ என்ற கேள்வி கிடையாது, யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய முடிவாகும். அதே போல்தான் ரோஹித் சர்மாவை தொடக்கத்தில் இறக்குவதும். அவர் பயிற்சி ஆட்டத்தில் டக் அடித்தார். ஆனால் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கி பார்ப்போம் என்கிறார் விராட் கோலி.

ஆகவே உட்குழுவில் இருப்பவர்களுக்கு ஒரு வழிமுறை, உட்குழுவில் இல்லாத வீரர்களுக்கு ஒரு வழிமுறை. கருண் நாயரை சுத்தமாக மறந்தேயாகிவிட்டது. அம்பதி ராயுடுவை ஒழித்தாகி விட்டது. மணீஷ் பாண்டேயை சீரற்ற முறையில் பயன்படுத்தி அவரும் ‘லாயக்கற்றவர்’ ‘நிறைய வாய்ப்புகள் கொடுத்து விட்டோம்’ என்று கூறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியாகி விட்டது. ஒருநாள் போட்டிகளிலிருந்து அஸ்வினை சுத்தமாக கழற்றி விட்டாகி விட்டது, புவனேஷ்வர் குமாரை டெஸ்ட் போட்டிகளிலிருந்து சுத்தமாக கழற்றி விடும் நடைமுறை இப்போது தொடங்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ்வை நினைத்தால் அணிக்குள் வா என்பது நினைத்தால் ‘போ’ என்பது என்று அவருக்கும் ஒரு நிச்சயமற்ற சூழலை உருவாக்கியாகி விட்டது.

அந்த வழியில், இவையனைத்தின் தொடர்ச்சி என்ற சூழலில்தான் ரிஷப் பந்த் உட்கார வைக்கப்பட்டதையும் பார்க்க வேண்டி நாம் பணிக்கப்பட்டுள்ளோம். வெற்றி பெறும் வரையில் எதுவும் கேள்விக்குட்படுத்தப்பட மாட்டாது என்ற உடனடி பலாபலன்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ஒரு வீரரை இப்படி செய்வது அவரை எப்படிப் பாதிக்கும் என்பதை விராட் கோலிக்கும் ரவிசாஸ்திரிக்கும் யாராவது உணர்த்தினால் நல்லது என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x