Published : 01 Oct 2019 12:09 PM
Last Updated : 01 Oct 2019 12:09 PM

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாக். வீரர் பாபர் ஆசம்

கராச்சி

கராச்சியில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் சதம் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகள் இடைவேளைக்குப் பின் பாகிஸ்தானில் சர்வதேச ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் சேர்த்தது. 306 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்து 67 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் இளம் வீரர் பாபர் ஆசம் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 105 பந்துகளைச் சந்தித்த பாபர் ஆசம் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்ளிட்ட115 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்கு எதிராக பாபர் ஆசம் அடிக்கும் 3-வது சதமாகும். சர்வதேச அரங்கில் 11-வது சதமாகவும் அமைந்தது.

பாபர் ஆசம் 11-வது சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி, தனது 11-வது சதத்தை அடிக்க 82 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். ஆனால், பாபர் ஆசம் 71 இன்னிங்ஸ்களில் தனது 11-வது சதத்தைப் பதிவு செய்து கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆனால், இவர்கள் இருவரைக் காட்டிலும் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா 11 சதங்களை 64 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் 65 இன்னிங்ஸ்களில் 11 சதங்களை அடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த காலண்டர் ஆண்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் பாகிஸ்தான் வீரர் எனும் பெருமையை பாபர் ஆசம் பெற்றார். மேலும், முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத்தின் சாதனையையும் பாபர் ஆசம் முறியடித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் கடந்த 1987-ம் ஆண்டில் ஒரு காலண்டர் ஆண்டில் 21 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களைக் கடந்திருந்தார். ஆனால், பாபர் ஆசம், இந்த காலண்டர் ஆண்டில் 19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தானின் தற்போதைய பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் 23 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களைக் கடந்து 3-வது இடத்தில் உள்ளார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x