Published : 27 Sep 2019 04:48 PM
Last Updated : 27 Sep 2019 04:48 PM

ஒருநாள் போட்டிகளில் அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ்வர் குமாரா? - புறக்கணிப்பு ஏன்?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் கடைசியாக ஆடினார் புவனேஷ்வர் குமார், அதன் பிறகு மே.இ.தீவுகள் தொடரிலும் இல்லை தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரிலும் இல்லை.

பும்ரா காயம் காரணமாக விலக்கப்பட்டதையடுத்து உண்மையில் புவனேஷ்வர் குமாரைத்தான் அழைத்திருக்க வேண்டும், ஆனால் உமேஷ் யாதவ் அழைக்கப்பட்டார். இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் சுத்தமாகக் கழற்றி விடப்பட்டது போல் புவனேஷ்வர் குமாரையும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து கழற்றி விடும் முனைப்பு ஏற்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.

ஜனவரி 2018-ல் தென் ஆப்பிரிக்காவில் புவனேஷ்வர் குமார் உச்ச பார்மில் இருந்தார், ஜொஹான்னஸ்பர்க் டெஸ்ட்டில் பேட்டிங்கிலும் அசத்தி ஆல்ரவுண்டராக அவர் கடினமான பிட்சில் தன்னை நிரூபித்தார். அதன் பிறகு நடந்த 3 டி20 போட்டிக்ளில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆனால் உச்சத்தில் இருந்த அவர் அதற்கு அடுத்த இங்கிலாந்து தொடரில் 3வது ஒருநாள் போட்டியில் கீழ் முதுகு காயம் அதிகமானது. அப்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று மீண்டும் ஆசியக் கோப்பைக்கு வந்தார்.

2016க்குப் பிறகு புவனேஷ்வர் குமார் 5 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடியுள்ளார். உலகக்கோப்பை 2019-லும் காயம் காரணமாக சில போட்டிகளில் ஆட முடியவில்லை, பிறகு அரையிறுதிக்குத் திரும்பினார். அதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒரு விதத்தில் காயங்கள் இவரது டெஸ்ட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்ற நிலையில் அவரை ஊக்குவித்து டெஸ்ட் போட்டிகளில் ஆடவைக்க ஆளில்லை. ஏனெனில் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோரும் இவர்களில் ஒருவர் இல்லை என்றால் உமேஷ் யாதவும் தற்போது முன்னுரிமை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “இப்போதைகு டெஸ்ட்டி பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா உள்ளனர், இவர்கள் ஒவ்வொருவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். பிறகு உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி இருக்கிறார்கள். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டைப் பொறுத்தவரை புவனேஷ்வர் குமார், கலீல் அகமெட் உள்ளனர். தீபக் சாஹரும் சிறப்பாக வீசி வருகிறார்” என்றார்.

அதாவது இதன் அர்த்தம் புவனேஷ்வர் குமார் இனி டெஸ்ட் போட்டிகளை மறந்து விட வேண்டியதுதான் என்பதா? அல்லது வாய்ப்பு கிடைத்தால் அவரை அணியில் சேர்ப்பார்கள் என்று பொருளா?

இப்படித்தான் வீரர்களிடத்தில் ஒரு விதமான நிச்சயமின்மையை ஏற்படுத்தி அவர்களின் ஆட்டத்திறமையை மழுங்கச் செய்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம்.

ஏற்கெனவே மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, ரவிச்சந்திரன் அஸ்வின் விவகாரத்தில் நாம் பார்த்ததுதானே. இப்போது ரிஷப் பந்த் மாட்டியிருக்கிறார். அணி வெற்றி பெறுவது ஏதோ தங்களால் மட்டுமே என்று எப்போது அணி நிர்வாகம் நினைக்கத் தொடங்குகிறதோ அப்போது ஒரு அணியின் வீழ்ச்சி ஆரம்பிக்கும்.

இந்த இந்திய அணி நிர்வாகத்தின் இந்தப் போக்கு வீழ்ச்சிக்குக் கொண்டு செல்லாமல் இருக்கும் என்று நம்புவோமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x