Published : 19 Sep 2019 10:33 AM
Last Updated : 19 Sep 2019 10:33 AM

இனிமேல் ரோஹித் இல்லை கோலிதான்: டி20 போட்டியில் புதிய உலக சாதனை

மொஹாலி

டி20 போட்டிகளில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தக்கவைத்திருந்த உலக சாதனையை கேப்டன் விராட் கோலி முறியடித்து வரலாறு படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தரம்சலாவில் நடைபெற இருந்த முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் குயின்டன் டீ காக் 52 ரன்களும், பவுமா 49 ரன்களும் சேர்த்தனர். இந்தியத் தரப்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கி இந்திய அணி, 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்தியத் தரப்பில் ஷிகர் தவண் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி 52 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்து 72 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 16 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 12 ரன்களிலும், ரிஷப்பந்த் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் சேர்த்ததன் மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

ரோஹித் சர்மா 88 இன்னிங்ஸ்களில் 2,422 ரன்கள் சேர்த்து சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். ஆனால் இந்தப் போட்டி தொடங்கும் போது 2,369 ரன்களுடன் இருந்த கோலி 72 ரன்கள் சேர்த்ததன் மூலம் 66 இன்னிங்ஸ்களில் 2,441 ரன்களுடன் முதலிடத்தைப் பிடித்தார்.

ரோஹித் சர்மா 2-வது இடத்தில் 89 இன்னிங்ஸ்களில் 2,434 ரன்களுடன் உள்ளார். 3-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 75 இன்னிங்ஸில் 2,238 ரன்களுடனும் உள்ளனர்.

இந்த வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில், "பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தங்கள் பணியைச் செய்தார்கள். ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. தென் ஆப்பிரிக்காவும் நன்றாக பேட் செய்தது. ஆனால், அவர்களின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர்களின் பணி சிறப்புக்குரியது.

புதிய வீரர்களை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அவர்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

என்னுடைய பேட்டிங்கில் எந்தவிதமான மந்திரமும் இல்லை. என்னுடைய சட்டையில் இருக்கும் இந்திய அணி என்ற பெயர்தான் காரணம். என்னுடைய நாட்டுக்காக விளையாடுவதை பெருமையாகக் கருதுகிறேன்" எனத் தெரிவித்தார்

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x