Published : 03 Sep 2019 03:39 PM
Last Updated : 03 Sep 2019 03:39 PM

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித்திடம் ஒரு புள்ளியில் முதலிடத்தை பறிகொடுத்தார் விராட் கோலி

மான்செஸ்டர்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்திடம் ஒரு புள்ளியில் முதலிடத்தை பறிகொடுத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

ஆஸ்திரலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணியின் கேப்டன் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம், அரைசதம் அடித்த அஜின்கயே ரஹானே 725 புள்ளிகளுடன் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்து 7-து இடத்தைப் பி்டித்தார்.

அதேபோல இந்திய பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி மே.இதீவுகள் தொடரில் 289 ரன்கள் குவித்ததையடுத்து, 40 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 30-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

தற்போது கோலியைக் காட்டிலும் ஒரு புள்ளி கூடுதலாகப் பெற்று முதலிடத்தில் இருக்கும் ஸ்மித் மேலும் புள்ளிக்கணக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மான்செஸ்டரில் நாளை ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி தொடங்குகிறது. இதில் ஸ்மித் சதம் அடித்தாலோ அல்லது அரைசதம் அடித்தாலோ புள்ளிக்கணக்கில் மேலும் உயரக்கூடும்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில் இருந்து வந்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஸ்மித்துக்கு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.

இந்த தடையால் ஸ்மித் விளையாடமல் இருந்த காலத்தில் அவரை விராட் கோலி முறியடித்து முதலிடத்தைப் பிடித்தார். இப்போது மீண்டும் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவதையடுத்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அதேசமயம், இந்தியாவுக்கு அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடருக்காக வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் முதலிடத்துக்கு முன்னேற முடியும்.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 3 முதல் 5-ம் இடம் வரை கேன் வில்லியம்ஸன், புஜரா, ஹென்றி நிகோலஸ் ஆகியோர் உள்ளனர். 6-வது இடம் முதல் 10-ம் இடம்வரை முறையே, ஜோ ரூட், ரஹானே, டாம் லேதம், கருணரத்னே,மார்க்ரம் ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். ரபாடா 2-வது இடத்திலும், பும்ரா 3-வது இடத்திலும் உள்ளனர். மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் 4-வது இடத்தில் உள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x