Published : 30 Aug 2019 04:19 PM
Last Updated : 30 Aug 2019 04:19 PM

உலகக்கோப்பை டி20 அணியை தயார் செய்ய தோனி எங்களுக்கு அவகாசம் அளித்துள்ளார்: இந்திய அணித் தேர்வாளர் விளக்கம்

புதுடெல்லி, ஐ.ஏ.என்.எஸ்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் இந்திய அணியில் தோனி இல்லாததால் அவர் புறக்கணிக்கப்படுகிறாரா என்று பலதரப்புகளிலும் கேள்வி எழுந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 அணிக்கான இந்திய அணியைத் தயார் செய்ய தோனி அணித்தேர்வுக்குழுக்கு அவகாசம் (?!) அளித்துள்ளார் என்றும் டீம் இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பான வீரர்கள் கையில் உள்ளதையும் போதிய பெஞ்ச் பலம் இருப்பதையும் உறுதி செய்து விட்டால் தான் தன் கிரிக்கெட் வாழ்வு குறித்து முடிவெடுப்பதாகவும் தோனி கூறியுள்ளதாக அணித்தேர்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ், செய்தி நிறுவனத்திடம் இந்திய அணித்தேர்வாளர் ஒருவர் கூறியதவது:

“அவரைப் புறக்கணிக்கிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எதிர்கால அணியை தயார் செய்து உலகக்கோப்பை டி20 அணியைத் தயார் செய்ய தோனி எங்களுக்கு அவகாசம் அளித்துள்லார். பொதுக்கருத்துக்கு முன்பாக அணிதான் தனக்கு முக்கியம் என்று அவர் உணர்கிறார், மேலும் ரிஷப் பந்த் காயமடைந்தால் இவருக்கும் உண்மையான மாற்று விக்கெட் கீபபர் நம்மிடம் இல்லை என்பதையும் பரிசீலித்து தோனி தன் வரவை நிறுத்தி வைத்துள்ளார். இப்போதைக்கு அவரை புறக்கணிக்கிறோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும் மே.இ.தீவுகள் தொடருக்கு முன்னால் அவர் 2 மாத கால ஓய்வு எடுத்துக் கொண்டார், அது இன்னமும் முடியவில்லை, நாம் கணிதத்தை நன்கு அறிந்தவர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

தோனியிடம் இன்னும் அமர்ந்து எதிர்காலம் பற்றி பேசவில்லை. அதனால்தான் எதிர்கால அணி, திட்டம் போன்றவற்றை உறுதி செய்ய அவர் எங்களுக்கு கால அவகாசம் அளித்துள்ளார். மேலும் பந்த் காயமடைந்து விட்டால், உலக டி20 போட்டிக்கு அவர் ஆட முடியாமல் போனால், குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் தோனியைத் தாண்டி நமக்கு வெளிச்சம் எதுவும் இல்லை” என்றார்.

அப்பொது தோனி என்ற பேட்ஸ்மெனை காக்க வேண்டும் என்ற கொள்கைதான் பிரதானம், ஆனால் அவர் பேட்டிங்கில் பழைய தோனி இல்லை என்பதுதானே என்று கேள்வி எழுப்பிய போது, அணித்தேர்வாளர் மாறுபட்டார்:

“இந்தப் பார்வை ரசிகர்களுடையதா? தோனி அணிக்கு எப்படி ஆடுவார் என்பதை அணி நிர்வாகம் தெரிந்து வைத்துள்ளது. இன்றுவரை கூட ஒரு பினிஷராக அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் ஆடியிருந்தால் கூட தோனி என்பவர் எப்படிப்பட்ட வலுவான வீரர் என்பதைப் புரிந்து கொள்வார்கள். நம்மிடம் பினிஷர்கள் இருப்பார்களேயானால், நாம் அவரை முன் வரிசையில் இறக்கி அவருக்காக செய்ய முடியாதா என்ன? உலகக்கோப்பையின் போது கூட பின் வரிசை வீரர்களுடன் ஆட அவரைப்போன்ற அனுபவசாலி தேவை என்பதாகவே நாங்கள் முடிவெடுத்தோம்.

350 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 98 டி20 போட்டிகளிலும் ஆடிய ஒருவரைப் பற்றி கருத்து கூறுவது எளிது. அவர் அணியை எத்தனைப் போட்டிகளில் வென்று கொடுத்துள்ளார் என்பதும் பலரும் அறிந்ததே. இன்றைய தொழில் நுட்ப உலகில் எதிரணியினர் அவரது பலம், பலவீனங்களை அலசாமல் இருப்பார்களா என்ன? அவர்களும் வெல்வதற்காகவே களமிறங்குகின்றனர். அவர்கள் வீசுவதையெல்லாம் தோனி தூக்கித் தூக்கி அடிக்க அனுமதிப்பார்களா என்ன? நாம் நேர்மையாக பேசுவோம். பந்த் காயமடைந்தால் நமக்கு உண்மையில் குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் மாற்று வீரர் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அணித்தேர்வாளரின் இந்தப் பேட்டியின் மூலம் நமக்கு எழும் கேள்வி என்னவெனில், ரிஷப் பந்த்திற்கு மாற்று வீரர் தோனியா அல்லது தோனிக்கு மாற்று வீரர் ரிஷப் பந்த்தா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x