Published : 27 Aug 2019 03:34 PM
Last Updated : 27 Aug 2019 03:34 PM

தங்கப்பதக்கத்துடன் பிரதமர் மோடியை சந்தித்தார் சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சிந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதி ஆட்டத்தில், உலகின் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த சிந்து, 4வது இடத்தில் இருந்த ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை சந்தித்தார்.

முதல் செட்டை 21-7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டையும் 21-7 என தன் வசப்படுத்தினார். முடிவில் சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். உலக பாட்மின்டனில் சிந்து கைப்பற்றிய 5-வது பதக்கம் இது ஆகும்.

இந்நிலையில் அவர் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சிந்து பேசும்போது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தியராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். எனது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும், நன்றி சொல்கிறேன். இன்னும் கடினமாக உழைத்து நாட்டுக்காக நிறைய பதக்கங்களைக் குவிப்பேன். . நான் காத்திருந்த வெற்றி இது. இதை நினைத்து பெருமைக் கொள்கிறேன்.” என்றார்.

இந்த நிலையில் இன்று மதியம் சிந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் உடனிருந்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x