Published : 24 Aug 2019 12:21 PM
Last Updated : 24 Aug 2019 12:21 PM

ஜஸ்பிரித் பும்ரா புதிய மைல்கல்: அஸ்வினின் சாதனையை முறியடிக்கப்பட்டதா? விவரம் என்ன?

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா : கோப்புப்படம்

நார்த் சவுண்ட்,

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

ஆனால், அஸ்வினின் சாதனையை பும்ரா முறியடித்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வீசப்பட்ட பந்துகளின் அடிப்படையில் அஸ்வினைக் காட்டிலும் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை பும்ரா சாய்த்துள்ளார். ஆனால் போட்டிகளின் அடிப்படையில் தொடர்ந்து அஸ்வின் முதலிடத்தில்தான் உள்ளார்.

ஆன்டிகுவா நகரில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று மே.இ.தீவுகள் அணி வீரர் பிராவோவின் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

ஜஸ்பிரித் பும்ரா 11 போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி 5-வது வீரர் எனும் சாதனையை பெற்றார். இதற்கு முன் 11 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை ஹர்பஜன்சிங், நரேந்திர ஹிர்வானி ஆகியோர் எடுத்திருந்தார்கள். இப்போது 3-வது வீரராக பும்ரா இணைந்தார்.

இதற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அணில் கும்ப்ளே 10 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் 9 போட்டிகள் 16 இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

மேலும், வெங்டேஷ் பிரசாத், முகமது ஷமி ஆகியோர் 13 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியநிலையில் அவர்களின் சாதனையை பும்ரா முறியடித்துவிட்டார்.

ஆனால், வீசப்பட்ட பந்துகள் அடிப்படையில் விக்கெட் வீழ்த்தியதை ஒப்பிட்டால் அஸ்வினைக் காட்டிலும் குறைந்த பந்துகளில் பும்ரா 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது தெரிய வருகிறது.

அதாவது அஸ்வின் 2,597 பந்துகள் வீசி 50 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஆனால், பும்ரா 2,464 பந்துகள் வீசி 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதாவது அஸ்வினைக் காட்டிலும் 133 பந்துகள் குறைவாக வீசி பும்ரா 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பும்ரா டெஸ்ட் போட்டியில் கடந்த ஆண்டுதான் அறிமுகமாகினார். முதலாவது ஆண்டிலியே 9 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிகளின் அடிப்படையில்பார்த்தால், தமிழக வீரர் அஸ்வின்தான் அதிவிரைவாக 9 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x