Published : 12 Aug 2019 11:52 AM
Last Updated : 12 Aug 2019 11:52 AM

அசத்துகிறார்; என்ன மாதிரியான வீரர்: கோலியின் சாதனையைப் புகழ்ந்து தள்ளிய கங்குலி

போர்ட் ஆப் ஸ்பெயின்,

இந்திய வீரர்களில் ஒருநாள் ஆட்டங்களில் அதிகமான ரன் குவித்தவர்களில் 2-வது இடம் பிடித்த விராட் கோலிக்கு, முன்னாள் கேப்டன் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 125 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

ஜேஸன் ஹோல்டர் வீசிய 32-வது ஓவரில் விராட் கோலி பவுண்டரி அடித்தபோது, ஒருநாள் அரங்கில் முக்கிய மைல் கல்லை எட்டினார். இதுவரை 238 இன்னிங்ஸ் விளையாடியுள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டியில் 11 ஆயிரத்து 406 ரன்கள் சேர்த்து கங்குலியின் சாதனையை முறியடித்தார்.

முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டியில் 11 ஆயிரத்து 363 ரன்களுடன் 2-வது இடத்தில் இருந்தார். விராட் கோலியின் இந்த சாதனையின் மூலம் இந்திய வீரர்களில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த 2-வது வீரர் எனும் சாதனையை கோலி படைத்து, கங்குலியை 3-வது இடத்துக்குத் தள்ளினார்.

முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 18 ஆயிரத்து 426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் இருக்கும் நிலையில் அவரின் சதங்களை எட்டுவதற்கு கோலிக்கு இன்னும் 7 சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

சர்வதேச அளவில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களில் விராட் கோலி தற்போது 8-வது இடத்தில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த பேட்ஸ்மேன் எனும் பெருமையை கடந்த 26 ஆண்டுகளாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத் பெற்றிருந்தார். அந்தச் சாதனையையும் விராட் கோலி முறியடித்துள்ளார்.

விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 19 ரன்களை எட்டியபோது, ஜாவித் மியான்தத்தின் 1930 ரன்களை கோலி முறியடித்து, 26 ஆண்டுகள் சாதனையை உடைத்தார். மியான்தத் 64 ஒருநாள போட்டிகளில் செய்த சாதனையை கோலி 34 ஒருநாள் போட்டிகளில் செய்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விராட் கோலி இதுவரை 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் அடித்துள்ளார். கோலிக்கு அடுத்த இடத்தில் 47 போட்டிகளில் 1708 ரன்களுடன் ஆஸி. முன்னாள் வீரர் மார்க் வாஹ் 2-வது இடத்தில் உள்ளார். அதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜேக்ஸ் காலிஸ்(1666, 40 போட்டிகள்), பாகிஸ்தான் வீரர் ரமிஸ் ராஜா(53 போட்டிகள், 1,624 ரன்கள்)

தனது சாதனையை விராட் கோலி முறியடித்ததை அறிந்த கங்குலி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் மற்றொரு மிகச்சிறப்பான இன்னிங்ஸ். என்ன மாதிரியான வீரர் விராட் கோலி " எனப் பாராட்டியுள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x