Published : 11 Aug 2019 11:29 AM
Last Updated : 11 Aug 2019 11:29 AM

4-ம் இடத்தில்தான் களமிறங்குவேன் எனச் சொல்லவில்லை: ஸ்ரேயாஸ் அய்யர் வெளிப்படை பேச்சு

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் : படம் ஏஎன்ஐ

போர்ட் ஆப் ஸ்பெயின்,
எந்த இடத்தில் களமிறங்கியும் பேட்டிங் செய்யத் தயார், 4-வது இடத்தில்தான் களமிறங்கு விளையாடுவேன் என்று நான் சொல்லவில்லை என்று இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இதற்கான பயிற்சியில் வீரர்கள் நேற்று ஈடுபட்டிருந்த நிலையில், அப்போதும் மழை வந்ததால் பயிற்சியும் பாதியிலேயே கைவிடப்பட்டது.

உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக இருந்தே இந்திய அணியில் 4-வது இடத்துக்கு தகுதியான, உரிய பேட்ஸ்மேனை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பல்வேறு வீரர்களை முயற்சித்துப் பார்த்தும் யாரும் சரியாகப் பொருந்தவில்லை. உலகக்கோப்பைப் போட்டியில் 4-வது இடத்துக்கு தகுதியான வீரரை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் இருந்தது.

இந்த சிக்கல் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரானத் தொடரிலும் தொடர்ந்து வருகிறது. ஆனால், தற்போது அணிக்குள் தேர்வாகி இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் நிச்சயம் 4-வது இடத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

ஆனால், டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இன்று நடக்கும் 2-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்குவார் என நம்பப்படுகிறது. மேலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை என்பதால், கே.எல்.ராகுலுக்கு விக்கெட் கீப்பிங் பணி தரப்படலாம் எனவும் தெரிகிறது.

இது குறித்து ஸ்ரேயாஸ் அய்யர் நேற்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அணிக்குள் இடம் பிடிப்பதில் எனக்கும் ரிஷப்பந்த், ராகுலுக்கும் இடையே போட்டி இருப்பது எனக்கு எந்தவிதமான கருத்தும் இல்லை. யார் அணியில் இடம் பெற வேண்டும் என்று முடிவு செய்வது அணி நிர்வாகம்தான்.

நான் 4-வது இடத்தில்தான் களமிறங்குவேன், அதில்தான் பேட்டிங் செய்ய விருப்பம் என்று நான் கூற முடியாது, அவர்கள் என்னை எந்த இடத்தில் களமிறங்கச் சொல்கிறார்களோ அங்கு களமிறங்குவேன்.

இன்னமும் 4-வது இடம் என்பது காலியாகத்தான் இருக்கிறது. நிச்சயம் அந்த இடத்தில் களமிறங்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால், சிறப்பாகச் செயல்படுவேன். எனக்கு மட்டுமல்ல அனைத்து வீரர்களையும் அதில் களமிறக்கி பயன்படுத்திப்பார்க்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள நிலையில் யாரும் தற்போதுள்ள நிலையில் திருப்தியாக இருக்கவில்லை.

தனிப்பட்ட முறையில் நான் 4-வது இடத்தில் களமிறங்க விருப்பம் இல்லை. நான் பேட்டிங்கில் எந்த இடத்திலும் களமிறங்கி சிறப்பாக விளையாடு வேண்டும் என்ற நெகிழ்வுத்தன்மையோடு இருக்கிறேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாகச் செயல்படுவேன்

இன்னும் நான் சிறப்பாக என்னை வெளிப்படுத்திக்கொள்ள இரு வாய்ப்புகள் இருக்கின்றன. நாளைய 2-வது ஒருநாள் ஆட்டத்தில் மழை வராது என்று நம்புவோம். எங்களால் பயிற்சியில் கூட ஈடுபடமுடியவில்லை. இந்தியா ஏ அணிக்காக விளையாடியதைப் போல் சிறப்பாக பங்களிப்பு செய்து, இந்த தொடரை வெற்றிகரமாக முடிக்கவே விரும்புகிறேன்.

இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x