Published : 05 Aug 2019 02:43 PM
Last Updated : 05 Aug 2019 02:43 PM

‘சென்ட் ஆஃப்’ கொடுத்த நவ்தீப் சைனி: ஐசிசி எச்சரிக்கையுடன் தகுதியிழப்புப் புள்ளி

புளோரிடா, லாடர்ஹில்லில் சனியன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முறைதவறி நடந்து கொண்டதற்காக இந்திய அறிமுக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு ஐசிசி எச்சரிக்கையுடன் ஒரு தகுதியிழப்புப் புள்ளியையும் வழங்கி நடவடிக்கை எடுத்தது. 

முதல் போட்டியில் நூறுக்கும் குறைவான மே.இ.தீவுகள் இலக்கை ‘சூப்பர் ஸ்டார்’ இந்திய அணி தட்டுத் தடுமாறி, திக்கித் திணறி மோசமாக வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரை மெய்டனாக வீசி டி20 சாதனை புரிந்த நவ்தீப் சைனி அந்த போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

ஆட்டத்தின் 4வது ஓவரில் நிகோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்திய சைனி அவரை வழியனுப்பும் போது ஆக்ரோஷமாக செய்கை செய்தார், அதாவது ஐசிசி விதிகளின் படி எதிரணி வீரரை வெறுப்பேற்றி அவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளத் தூண்டும் எந்த ஒரு நடவடிக்கையும் தண்டனைக்குரியதாகும். 

அந்த வகையில் தன் தவற்றை சைனி ஒப்புக் கொண்டார்.  இதனையடுத்து அவருக்கு எச்சரிக்கையுடன் ஒரு தகுதி இழப்புப் புள்ளி வழங்கப்படுகிறது.

எந்த ஒரு வீரரும்  24 மாத காலத்திற்குள் 4 அல்லது அதற்கும் மேற்பட்ட தகுதியிழப்புப் புள்ளிகளைப் பெற்றால் அது நீக்கப்புள்ளிகளாக மாற்றமடைந்து வீரர் இடைநீக்கம் செய்யப்பட தகுதியானவர் ஆகிறார். 

2 இடைநீக்கப் புள்ளிகள் சேர்ந்தால் அது ஒரு டெஸ்ட், 2 ஒருநாள், 2 டி20 போட்டிகளுக்குத் தடை செய்யப்படுவதை அனுமதிக்கிறது. ஆகவே இந்த தகுதியிழப்பு புள்ளி மூலம் நவ்தீப் சைனியின் நடவடிக்கைகள் இனி கண்காணிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x