Last Updated : 04 Aug, 2019 08:33 AM

 

Published : 04 Aug 2019 08:33 AM
Last Updated : 04 Aug 2019 08:33 AM

10 ஓவரில் முடிக்க வேண்டிய இலக்கை திக்கி, தடுமாறி எட்டிய இந்தியா: சைனி அசத்தல்: சொதப்பிய மே.இ.தீவுகள் 

லாடர்ஹில்,

சைனி, புவனேஷ்வர் குமார், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சால் லாடர்ஹில்லில் நேற்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி திக்கித் தடுமாறி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் சேர்த்தது. 96 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிதான இலக்கை விரட்டிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 17.2 ஓவர்களில் 98 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகனாக சைனி தேர்வு செய்யப்பட்டார். 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதற்கு முன் கடைசியாக நடந்த 3 டி20 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி அதற்க முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியா, மே.இ.தீவுகள் அணி மோதும் இந்த போட்டி நடத்தப்பட்டதன் நோக்கமே புளோரிடாவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதுதான். ஆனால் இரு அணிகளும் சேர்ந்து ஆடிய  கிரிக்கெட், ரசிகர்கள் வெறுக்கும் அளவுக்கு இருந்தால் எப்படி பிரபலமாகும். 

200 ரன்களுக்குள் இரு அணிகளிலும் சேர்த்து 15 விக்கெட் காலியாகியுள்ளது. 95 ரன்கள் இலக்கை 10 ஓவர்களில் சேஸ் செய்து தனது பராக்கிரமத்தை வெளிப்படுத்த வேண்டிய இந்திய அணி அதைத் தட்டுத்தடுமாறி, விக்கெட்டுகளை இழந்து, 18 ஓவரில் சேஸ் செய்தது. இதுவா தரமான கிரிக்கெட்.

முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தநிலையில் சுழற்பந்துவீசும் பகுதிநேர பேட்ஸ்மேன்கள் கடைசியில் களத்தில் இருந்து இந்தியஅணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்கள். இரு அணிகளிலும் பேட்டிங்கில் சாதனை படைக்கக் கூடிய வீரர்கள் இருந்தும் போட்டியை பார்க்கவந்த ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள்.

சர்வதேச அளவில் சவால் விடுக்கும் அளவில் இருக்கும் இந்திய அணியின் பேட்டிங் நேற்று படுமோசம். உலகக்கோப்பை தோல்வியில் இருந்து இன்னும் மீளவில்லையை என்ற கேள்விய எழுப்பியது. 

 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகிறோம் என்று சொல்லிவிட்டு முதல் ஆட்டத்திலேயே தரம்குறைந்த வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. 

வெற்றி பெறக்கூடிய இலக்குதான், இந்திய அணி வென்றுவிடும் என்று போட்டியைப் பார்த்த ரசிகர்களுக்கு தெரிந்தாலும், அந்த வெற்றியை எவ்வாறு பெற்றோம் என்பதில்தான் இருக்கிறது. இன்னும் கூடுதலாக 30 ரன்களை மே.இ.தீவுகள் அணி சேர்த்திருந்து, இந்திய அணி ஒரு விக்கெட்டை கூடுதலாக இழந்திருந்தால்கூட தோல்வி உறுதியாகி இருந்திருக்கும். 
இந்திய அணியில் அதிகபட்ச ஸ்கோர் என்பது ரோஹித் சர்மா சேர்த்த 24 ரன்கள்தான். மற்ற வீரர்கள் அனைவரும் 10, 19, என ஆட்டமிழந்ததை என்னவென்று சொல்வது. 

ஷிகர் தவண் காயத்தில் இருந்து மீண்டு உடல்தகுதியுடன் இருக்கிறாரா என்று பேட்டிங்கை பார்த்தபோதே சந்தேகம் எழுந்தது. கால்களை நகட்டாமல் ஆடி காட்ரெல் பந்துவீச்சில் எல்பிடிபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மா தொடர்ந்து சுழற்பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை இழந்து வருகிறார். உலகக்கோப்பையில் சிம்மசொப்னமாக திகழ்ந்த ரோஹித் சர்மா பேட்டிங் லெக்ஸ்பி்ன், நக்குல் பால், போன்றவற்றை கணிக்க முடியாமல் பலியாகிவிடுகிறது. 
ரிஷப்பந்த் நேற்று ஆட்டமிழந்தது மிகப்பெரிய அவலம். பந்து பிட்ச் ஆகி ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்தை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழந்தார். தோனிக்குப்பின் நல்ல விக்கெட் கீப்பர் கிடைப்பார் என்ற ஏக்கம், ஏமாற்றத்தில்தான் முடியப் போகிறது. இதுபோன்ற நேரத்தில்தான் தோனி நினைவுக்கு வருகிறார். 

விராட்கோலி, மணிஷ் பாண்டே ஆகியோரும் பொறுப்புடன் பேட் செய்ய வேண்டியவர்கள், விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தது ஏமாற்றம். 

இந்திய அணிக்கு நேற்றைய போட்டியில் கிடைத்த ஒரு ஆறுதலாக விஷயம் நவ்தீப் சைனி அறிமுகப் போட்டியில் பந்துவீச்சில் அசத்திவிட்டார். 4 ஓவர்கள் வீசிய சைனி ஒரு மெய்டன் வீசி 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தவிர இந்திய அணியில் சிறப்பாக அம்சம் என எதையும் கூற முடியாது. 

சைனி தான் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தன்னுடைய முதல் ஓவரிலேயே 2விக்ெகட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் சைனி ஆவார். இதற்கு முன் பிரக்யான் ஓஜா 2009-ல் டிரன்ட்பிரட்ஜில் வங்கதேதச்துக்கு எதிராக முதல் ஓவரிலேயே 2 விக்கெட் வீழ்த்தினார். 

அதுமட்டுமல்லாமல் டி20 போட்டியி்ல கடைசிஓவரில் மெய்டன் ஓவர் வீசிய இந்திய அணியின் முதல் பந்துவீச்சாளர் எனும் பெருமையை சைனி பெற்றார். உலகளவில் 4-வது வீரராக சைனி இருக்கிறார். இதற்கு முன், ஜீத்தன் படேல்(நியூஸி), முகமது அமீர்(பாக்), ஜனக் பிரகாஷ்(சிங்கப்பூர்) ஆகியோர் மட்டுமே கடைசி ஓவரை இதுவரை மெய்டனாக வீசியுள்ளார்கள்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொருத்துவரை நடப்பு டி20 சாம்பியன் என்று சொல்லிக்கொண்டு அதற்கு ஏற்றார்போல் அவர்கள் ஆட்டம் அமையவில்லை. முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். பொலார்டும் விரைவாக ஆட்டமிழந்திருந்தால், 70 ரன்களில் சுருண்டிருக்கும். 

டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்தது. கேம்பெல், லூயிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரை வாஷிங்டன் சுந்தரை வீசச்செய்தார் கோலி. அதற்கு பலனும் கிடைத்தது. சுந்தர் வீசிய முதல் ஓவரின் 2-பந்தில் டீப்மிட்விக்கெட்டில் கேம்பெல் அடித்த பந்து பாண்டியாவிடம் கேட்ச் ஆனது. டக்அவுட்டில் கேம்பெல் வெளியேறினார். அடுத்து பூரண் களமிறங்கினார்.
2-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் கடைசிப்பந்து நக்கல் பந்தாக வந்ததை கவனிக்காத லூயிஸ் போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பொலார்ட் களமிறங்கி, பூரணுடன் சேர்ந்தார். 

ஒரு அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் இருவரையும் டக்அவுட்டில் ஆட்டமிழக்கச் செய்தது இந்திய அணிக்கு இது முதல் முறையாகும். 

பூரன், பொலார்ட் இருவரும் சேர்ந்து சில அதிரடியான ஷாட்களை அடித்து ரன்களைச் சேர்த்தனர். சைனி வீசிய 5-வது ஓவரின் 4-வது பந்தில் பூரண் 20 ரன்கள் சேர்த்திருந்தபோது ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெட்மெயர் முதல்பந்திலேயே போல்டாகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

கலீல் அகமது வீசிய 6வது ஓவரிலும் விக்கெட் விழுந்தது. ஆர்.பாவெல் 4 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த மே.இ.தீவுகள் தடுமாறியது.

அடுத்துவந்த கேப்டன் பிராத்வெய்ட், பொலார்ட்டுடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் வகையில் நிதானமாக பேட் செய்தனர். அவ்வப்போது பொலார்ட் பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். 6வது விக்கெட்டுக்கு இருவரும் 34 ரன்கள் சேர்த்தநிலையில் பிரிந்தனர்.

குர்னல் பாண்டியா வீசிய 15-வது ஓவரில் 9 ரன்னில் பிராத்வெய்ட் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த நரேன் 2 ரன்கள், கீமோ பால் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

அதிரடியாக பேட் செய்த பொலார்ட் 49 ரன்னில் சைனி பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். இன்னும் ஒருரன் அடித்து  அரைசதம் அடித்திருந்தால் 2012-ம் ஆண்டுக்குப்பின் பொலார்ட் அடித்த அரைசதம் என்ற ஆறுதல் கிடைத்திருக்கும். 
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு மே.இதீவுகள் அணி 95 ரன்கள் சேர்த்தது. 9-வது முறையாக மே.இ.தீவுகள் அணி 100 ரன்களுக்கும் குறைவாக சேர்த்தது. 

இந்திய அணி தரப்பில் சைனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
96 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது. தவண், ரோஹித்சர்மா ஆட்டத்தைத் தொடங்கினர். காட்ரெல் வீசிய 2-வது ஓவரில் தவண் அதிகமாகத் தடுமாறினார். அதற்கு ஏற்றார்போல், கடைசிப்பந்தில் கால்காப்பில் வாங்கி ஒரு ரன்னில் தவண் எல்பிடபிள்யு ஆகினார்.

அடுத்துவந்த கோலி, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்தினர். 7-வது ஓவரை நரேன் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை கணிக்க முடியாமல் ரோஹித்சர்மா அடித்து 24 ரன்னில் பொலார்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தவந்த ரிஷப் பந்த் வந்தவேகத்தில் ஆப்-சைட் விலகிச்சென்ற பந்தை தொட்டு வெளியேறினார். 10ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்திருந்தது.

அடுத்துவந்த மணிஷ் பாண்டே, கோலியுடன் சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ேபட் செய்தார்கள். கீமோ பால் வீசிய 12-ஓவரில் 19 ரன்னில் பாண்டே போல்டாகினார். நீண்நேரம் நிலைக்காத கோலி 19 ரன்னில் காட்ரெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சல்யூட் வாங்கிச்சென்றார்.

குர்னல் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா இருவரும் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். ஆனால், குர்னல் பாண்டியா 12 ரன்கள் சேர்த்திருந்தபோது, கீமோ பால் பந்துவீச்சில் போல்டாகினார்.அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர், ஜடேஜாவுடன் இணைந்தார்.
3 ஓவர்கள் மீதமிருக்கும்நிலையில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. கீமோ பால் வீசிய 18-வது ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார் சுந்தர். 

சுந்தர் 8 ரன்னிலும், ஜடேஜா 10 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 17.2ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்து இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x