Published : 02 Aug 2019 06:18 PM
Last Updated : 02 Aug 2019 06:18 PM

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வகாப் ரியாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு?

லாகூர்,

பாகிஸ்தான் அணியின் இடதுவைக வேகப்பந்துவீச்சாளர் வகாப் ரியாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக துனியா செய்திகள் தெரிவிக்கின்றன. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வகாப் ரியாஸ் அறிவித்துவிட்டதாகவும்,  தற்போது கனடா டி20 போட்டியில் விளையாடி வருவதால், அது முடிந்தவுடன் முறைப்படி அறிவிப்பதாக வகாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு முன்புவரை வகாப் ரியாஸை பாகிஸ்தான் அணி நிர்வாகம் தேர்வு செய்யவில்லை. ஆனால் அணியில் மூத்த வீரர்கள் யாரும் இல்லை என்பதால், முகமது ஆமிர், வகாப் ரியாஸை தேர்வு செய்தது. சிறப்பாக செயல்படவில்லை என்று இருவரும் ஓரங்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் இருவரும்தான் பாகிஸ்தான் அணியில் சிறப்பாகப் பந்துவீசினார்கள். 

இதில் முகமது ஆமீர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது முடிவை அறிவித்துவிட்டார். இப்போது, வகாப் ரியாஸும் அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வகாப் ரியாஸ் 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே வகாப்பின் சிறந்த பந்துவீச்சாக இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வகாப் ரியாஸ் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.

ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமீர் ஓய்வு அறிவிப்பை முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா, ஷோயப் அக்தர் ஆகியோர் கடுமையாக விமர்சித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். ஏனென்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் தொடங்கி நடந்து வரும் வேளையில் மூத்த வீரர்கள் ஓய்வு அறிவிப்பது அணியை பலவீனமாக்கும் என்று விமர்சித்தனர். 

ஆனால், முகமது ஆமீர், தனது ஓய்வை நியாயப்படுத்தி, இளைஞர்களுக்கு வழிவிடும் நோக்கில் ஓய்வு பெறுகிறேன், ஆனால், டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன் எனத் தெரிவித்தார். 


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x