Last Updated : 17 Jul, 2015 08:28 PM

 

Published : 17 Jul 2015 08:28 PM
Last Updated : 17 Jul 2015 08:28 PM

முதல் டி20: ஜிம்பாப்வேயை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

ஹராரேயில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 55/0 என்ற அபாரமான தொடக்கத்தை வீணடித்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது.

அக்சர் படேல் அபாரமாக வீசி 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்பஜன் சிங் 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மோஹித் சர்மா 3 ஓவர்கள் வீசி 8 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பெரிதும் எதிர்பார்த்த பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா ஏமாற்றம் அளித்தார். இவர் வீசிய சர்வதேச கிரிக்கெட் முதல் பந்தை சிபாபா சிக்சருக்கு தூக்கி அடித்தார். இதனால் 3 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் எதையும் அவர் கைப்பற்றவில்லை.

முன்னதாக இந்திய அணியின் தொடக்க வீரர்களான முரளி விஜய், ரஹானே ஆகியோர் 7 ஓவர்களில் 64 ரன்கள் என்ற தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் மூன்றாவது ஓவரில்தான் முதல் பவுண்டரியே வந்தது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 3-வது ஓவரில் ரஹானே, விஜய் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.

5-வது ஓவரில் முசரபனி ஒரு ஷார்ட் பிட்ச் அல்வா பந்தை லெக் திசையில் பிட்ச் செய்து கொடுக்க அதனை முறையாக சிக்சருக்கு அடித்தார் விஜய். அதே ஓவரில் லாங் ஆனில் ஒரு பவுண்டரியையும், தேர்ட்மேனில் ஒரு பவுண்டரியையும் அடித்தார் விஜய். மீண்டும் 6-வது ஓவரில் மட்ஸீவா வீசிய ஓவரில் மேலேறி வந்து எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரியையும், பாயிண்ட், கவர் பாயிண்ட் இடைவெளியில் இன்னொரு பவுண்டரியையும் விளாசினார். 19 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்த விஜய், சிகந்தர் ரஸாவின் அபார நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

ரஹானேவுக்கு சரியாகச் சிக்கவில்லை, அவர், 32 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து கிரீமரின் அருமையான பிளைட்டட் பந்துக்கு முன் விளிம்பு எடுக்க அவுட் ஆனார். 9.2 ஓவர்களில் 82/2 என்ற நிலையில், பாண்டே உத்தப்பா இணைந்தனர், பாண்டே ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 19 பந்தில் 19 எடுத்து அவுட் ஆனார்.

ராபின் உத்தப்பா நிதானமாக ஆடியே 35 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார். ஸ்டூவர்ட் பின்னி இறங்கியவுடன் ஆக்ரோஷம் காட்டி ஒரு சிக்சருடன் 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். கேதர் ஜாதவ் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஹர்பஜன் 8 நாட் அவுட்.

ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் ஸ்லோயர் பந்துகளை அருமையாக வீசி கட்டுப்படுத்தினர், இல்லையெனில் ஸ்கோர் இன்னும் கூட அதிகமாக இருந்திருக்கும். 20 ஓவர்களில் இந்தியா 178/5. ஜிம்பாப்வே தரப்பில் மபோபு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடக்க ஜோடி அபாரம்.. அதன் பிறகு வீழ்ச்சி

ஜிம்பாப்வே தன்னம்பிக்கையுடன் தொடங்கியது. இந்தப் பிட்சிற்கு புவனேஷ் குமார் பவுலிங் பொருத்தமாக அமைய அவர் சிக்கனம் காட்டினாலும் சந்தீப் சர்மாவை சிக்சருடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரவேற்றார் சிபாபா. இருவரும் இணைந்து ஸ்கோரை 8 ஓவர்களில் 55 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது, 27 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 23 எடுத்திருந்த சிபாபா, ஹர்பஜன் சிங்கிடம் அவுட் ஆனார்.

64/1 என்ற நிலையில் அக்சர் படேல் 10-வது ஓவரில் அபாய மசகாட்சா (28, 1 பவுண்டரி 2 சிக்சர்) மற்றும் கேப்டன் சிகும்பரா ஆகியோரை வீழ்த்த 11-வது ஓவரில் கோவண்ட்ரி 10 ரன்களில் ஹர்பஜனிடம் அவுட் ஆக ஜிம்பாப்வே சரிவு தொடங்கியது.

கடைசியில் 20 ஓவர்களில் 124 ரன்களை மட்டுமே ஜிம்பாப்வே எடுத்தது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது,

ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார். புவனேஷ் குமார் 4 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார், ஆனால் விக்கெட் கைப்பற்றவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x