Published : 01 Aug 2019 04:03 PM
Last Updated : 01 Aug 2019 04:03 PM

இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர வாய்ப்பு?- பிசிசிஐ-க்கு 2 ஆயிரம் விண்ணப்பங்கள்

புதுடெல்லி, 

இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கு, பிசிசிஐ விண்ணப்பங்கள் கோரியுள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பணியில் தொடர்வார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பைப் போட்டி வரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டு இருந்தார். உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியோடு இந்திய அணி வெளியேறிய நிலையில் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது.

இதுவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சுப் பயிற்சியாளர், பியோதெரபிஸ்ட் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் ஏறக்குறைய 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த 2 ஆயிரம் விண்ணப்பங்களில் ரவி சாஸ்திரி, சஞ்சய் பங்கர், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி, பரத் அருண்,ஸ்ரீதர், ராபின் சிங், நியூஸிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹசன், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு புதிதானவர்கள். 

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிலா ஜெயவர்தனா பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என்ற செய்தி வந்தநிலையில் அதில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. 

பிசிசிஐக்கு வந்துள்ள விண்ணப்பங்களில் பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர்கள் குறைவு மற்றும் கேப்டன் விராட் கோலியின் விருப்பம், அணியில் கடந்த 2 ஆண்டுகால செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியில் தொடர்வார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் 2021-ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டிவரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார் என்று கூறப்படுகிறது. இந்த இரு ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் , ஆஸியில் சென்று டி20 உலகக்கோப்பை, ஐசிசி ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியும் நடக்கிறது. 

ரவி சாஸ்திரி பயிற்சியின் கீழ் இந்திய அணிசிறப்பாகவே செயல்பட்டுள்ளதாக  பிசிசிஐ வட்டாரங்கள் நம்புகின்றன. ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ்  இந்திய அணி 70 சதவீத ஆட்டங்களில் வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடர் வெற்றி, 2 முறை ஆசியக் கோப்பையை வென்றது, உலகக் கோப்பைப் போட்டியில்  அதிக அளவு ரன்கள் குவித்தது, தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் வெற்றி போன்றவை இருக்கின்றன. 

அதேசமயம், தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துத, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இழந்தது, உலகக்கோப்பைப் போட்டியில் அரையிறுதியோடு வெளியேறியது போன்ற முக்கிய குறைபாடுகளும் இருக்கின்றன. 

ஆனால், கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முழுமையும் மீண்டும் ரவி சாஸ்திரிதான் பயிற்சியாளராக  தொடர வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.  மேலும் கேப்டன் விராட் கோலியும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வதில் விருப்பம்தான் என்று தெரிவித்துள்ளதாக ரவி சாஸ்திரியின் பதவிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. 

இதுதவிர்த்து ஒருநாள் அணிக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. ரவி சாஸ்திரி இருந்தால்மட்டுமே கோலியை எளிதாக சமாதானம் செய்து, ரோஹித் சர்மாவை மாற்ற முடியும், கோலியை டெஸ்ட், டி20 போட்டிக்கு மட்டுமே கேப்டனாக நியமிக்கலாம் என்பதாலும் ரவி சாஸ்திரிக்கு ஆதரவு வலுத்துள்ளது.

இந்திய அணியில் இப்போதுள்ள பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் தொடர்வார் எனத் தெரிகிறது. ஆனால், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் மாற்றப்பட்டு புதியவர் நியமிக்கப்படலாம், அதேபோல பீல்டிங் பயிற்சியாளராக தற்போதுள்ள ஸ்ரீதருக்கு ஆதரவு இருந்தாலும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் பெயரும் அதிகமாக ஆலோசிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x